அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளரை பிரதமர் மோடி தான் முடிவு செய்வார்- முத்தரசன் பேட்டி

246 0

அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளரை பிரதமர் மோடி தான் முடிவு செய்வார் என்று சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு லட்சக்கணக்கில் பரவியதற்கு காரணம் மத்திய அரசு தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தும், மத்திய அரசு எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா பாதிப்பு காலத்தை தங்கள் நோக்கங்களை நிறைவேற்றி கொள்ள மத்திய அரசு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டது. குறிப்பாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் விவாதித்து நிறைவேற்றாமல் அவசர சட்டமாக கொண்டு வந்துள்ளது.
எடுத்துகாட்டாக மின்சார திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களை விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ளது. மேலும், கடந்த 5-ந் தேதியில் பிரதமர் மோடி அயோத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மதசார்பின்மையை குழி தோண்டி புதைத்துவிட்டார். தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டும் தான் என்று தமிழக அரசு கூறியதை வரவேற்கிறோம். ஆனால் வெறும் வார்த்தையாக இருக்காமல் சட்டமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்று அமைச்சர்களால் கூற முடியாது. பிரதமர் மோடி தான் முடிவு செய்வார். ஏனென்றால் பாம்பின் வாயில் சிக்கிய தவளை போன்று அ.தி.மு.க., பா.ஜனதா கட்சியிடம் சிக்கி கொண்டு உள்ளது. குறிப்பாக பா.ஜனதா அதிகார பலத்தை பயன்படுத்தி தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஆனால் பா.ஜ.க.வின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இறப்பு குறித்த அறிக்கை முறையான நடவடிக்கை இல்லாமல், முன்னுக்கு பின் முரணாக உள்ளது. கொரோனாவுக்கு எத்தனை டாக்டர்கள் இறந்துள்ளனர் என்ற விவரம் கூட தெரியவில்லை.
தமிழகத்தில் பா.ஜனதா இருக்கும் இடமே தெரியவில்லை. அ.தி.மு.க. எப்படி செயல்பட வேண்டும் என்பதை சொல்லுவது மோடி தான். மக்களின் நலனுக்காகவும், மாநில உரிமையை மீட்கவும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராடி வருகின்றன. எனவே, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.