ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக இணக்கப்பாடு!

241 0

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் நாட்டின் நலன்களுக்கும் பொருத்தமான, ஓர் இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவத்தை ஒப்படைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு, அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் கூடிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நிலையில் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேர்தலை அடுத்து இடம்பெற்ற செயற்குழுக் கூட்டங்களில் இதுதொடர்பாக ஆராயப்பட்ட நிலையில் இன்றைய கூட்டத்தில் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், கட்சிக்குப் புதிய தலைவரை நியமிப்பது குறித்து கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் தலைமைத்துவத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பவர்கள் மற்றும் சுயவிருப்பில் முன்வந்தவர்களுக்கு மத்தியில் நாட்டிற்கும் கட்சிக்கும் பொருத்தமான இளம் தலைவரொருவரைத் தெரிவுசெய்வதற்குத் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் இளைய தலைவர்களுக்குப் புதிய பொறுப்புக்களை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றைத் திறம்படக் கையாண்டு முறையான நிர்வாகத்தை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கின்ற, கட்சி ஆதரவாளர்களின் மனங்களை வென்றெடுக்கின்ற ஒரு இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு இந்தக் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.