சிதறிப்போயுள்ள தமிழ் தேசியமும் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை தேசியமும்!

438 0

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் அதிக முக்கியத்துவமும் தனித்துவமும் கொண்டதாக அமைந்துள்ளதாகவே தெரிகிறது. வடக்கு கிழக்கு ஒரு மையமாகவும் தென் இலங்கை இன்னோர் மையமாகவும் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. பொதுஜன பெரமுனக் கட்சி விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழும் அதிக பெரும்பான்மையை எட்டியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உறுதியான அரசாங்கம் இலங்கைத் தீவில் மட்டுமல்ல பிராந்திய அரசியலையும் சர்வதேச அரசியலையும் கையாளும் வல்லமை பொருந்தியதாக மாறும் சூழலை எட்டியுள்ளது. அதே நேரம் வடக்கு கிழக்கில் தமிழ் அரசியல் தலைமைகளும் அவற்றின் ஒருமித்த பலமில்லாத போக்கும் அதிக அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தமிழரது அரசியலில் ஏற்படுத்தப் போகும் விளைவுகளை தேடுவதாகவே இக்கட்டுரை அமையவுள்ளது.

முதலாவது வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்கு வங்கி சரிந்துள்ளமை அதன் ஆசனங்களின் தொகையையும் வெகுவாக பாதித்துள்ளது. வடக்கு கிழக்கில் 29 ஆசனங்களை பெறும் நிலை காணப்பட்டாலும் 22 ஆசனங்களை கைப்பற்றி ஒரு பலமான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் இருந்தது. பின்பு அதன் அணுகுமுறையினாலும் அரசியல் நடவடிக்கையாலும் 16 ஆசனங்களை(2015) பெறும் நிலை ஏற்பட்டது.
தற்போது 10 ஆசனங்கள்(2020) என்ற நிலைக்குள் கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது. இதனை அவதானித்தால் எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலையை எட்டலாம் என்று கருதப்படுகிறது. கூட்டமைப்பின் வீழ்ச்சி ஆரோக்கியமானதா என்ற கேள்வி இயல்பானதே. எண்ணிக்கையிலும் ஐக்கியத்திலும் கவனத்தைக் குவித்துப் பார்த்தால் தமிழரது அரசியலில் காணப்பட்ட ஆரோக்கியம் கெட்டுவிட்டதாகவே தெரிகிறது. வடக்கு கிழக்கில் தெளிவான பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் செல்வாக்குச் செலுத்திய கட்சி காணாமல் போய்விட்டதாகவே தெரிகிறது. அதுவும் 1949 இல் உருவான தமிழரசுக் கட்சி பல மாற்றங்களுடன் தமிழ் தேசியத்தை வளர்த்த கட்சி தேர்தல் அரசியலில் தோற்றுவிட்டதாகவே தெரிகிறது. அந்த வகையில் பார்த்தால் தமிழரது அரசியலின் ஆரோக்கியம் கெட்டுவிட்டதாகவே தெரிகிறது. ஆனால் அது உண்மையானதா என்றால்? கடந்த ஒரு தசாப்தங்களில் அக்கட்சியின் போக்கும் அது ஏற்படுத்திய எதிர்முரணிய அரசியலும் அதன் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது இது தவிர்க்க முடியாத அரசியலாகவே தெரிகிறது. கிளிநொச்சி வவுனியா மன்னார் முல்லைத்தீவு தவிர்ந்த மாவட்டங்கள் அனைத்துமே கூட்டமைப்புக்கு தோல்வியாகவே அமைந்துள்ளது.

இரண்டு இத்தகைய போக்கினால் தமிழரது அரசியல் பாதிப்படையுமா என்று கேட்டால் அது கேலித்தனமாகவே இருக்கும். காரணம் கடந்த காலம் முழுவதும் எந்த மாறுதல் தமிழரது அரசியலில் ஏற்பட்டது. வறுமை அகற்றப்பட்டதா? உரிமை நிலைநாட்டப்பட்டதா? வடக்கு கிழக்கு பாதுகாக்கப்பட்டதா? ஆக்கிரமிப்பு தடுக்கப்பட்டதா? தமிழரது சொத்துக்களும் சுரண்டப்படுவது நிறுதட்தப்பட்டதா? என்று கேட்டால். எதுவுமே கையாளப்படவில்லை என்று தான் முடிவாகும். அப்படியானால் ஏன் அதிக எண்ணிக்கையில் பாராளுமன்றத்தை நிரப்ப வேண்டும். வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றவா? அல்லது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆதரவளிக்கவா? அல்லது அரசியல் தீர்வு என்ற விடயத்தினை காலத்தை நீடிப்புக்குள் உட்படுத்தவா? எனவே இதனால் ஏற்பட்ட விளைவுகளை வைத்துக் கொண்டு பார்த்தால் பாராளுமன்ற உறுப்புரிமையால் தமிழ் மக்களுக்கு எதனையும் சாதமாக்க முடியவில்லை என்பது தெளிவாகிறது.

மூன்று புதிதாக சில கட்சிகளிலிருந்தும் முன்னணிகளிலிருந்தும் தமிழ் மக்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளனர். அதாவது தமிழ் தேசிய அரசியல் பேசிய தரப்புக்கள் மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டு பாராளுமன்றம் செல்லவுள்ளனர். இது தமிழருக்கு எத்தகைய பயனை ஏற்படுத்தும். அதிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரு ஆசனங்களைளும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது என்ற வகையில் எழுந்துள்ள விடயம் தொடர்பானது. இவர்கள் மூவரும் ஐக்கியமாக பாராளுமன்றத்தினை எதிர்கொள்வார்களா? என்பது தமிழர் பரப்பிலுள்ள கேள்வியாகும். எண்ணிக்கையை விட ஆளுமைகள் அதிக செல்வாக்கினை ஏற்படுத்தலாம் என்ற அடிப்படையில் பார்த்தால் அதிக மாற்றத்தை ஏற்படுத்தலாம். இவர்கள் மூவரும் தேர்தல் அரசியலில் எதிர் எதிர் துருவமாக இருந்தாலும் பாராளுமன்ற அரசியலில் ஒன்றாக பயணிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 10 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் இருக்கும் போது இவர்கள் தங்களுக்குள் முரண்படுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமல்ல எதிரணிக்கும் இலாபகரமானதாக அமையும்.தமிழ் மக்களது அரசியலுக்காக ஒன்றிணைவது அவசியமானது. இதனை தமிழ் மக்கள் அவதானிப்பார்கள்.

நான்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூவரும் பிராந்திய சர்வதேச அரசியலை கையாளுவதற்கு தெளிவான பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது அவசியமானது. தனித்து செயல்படாது விரோதங்களை முதன்மைப் படுத்தாது நேர்கணியமான உத்திகளை வகுத்து செயல்பட முனைவது தற்போதைய தேவையாகும். புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் சரிவர கையாள முனைந்தால் தமிழரது அரசியல் செல் நெறியில் மாற்றம் ஏதும் நிகழவாய்ப்பு ஏற்படும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து பயணிக்குமாயின் கடந்த காலத்தில் தவறுவிடப்பட்ட விடயங்களை வெற்றி கொள்ள முடியும். அல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தேர்தலுக்கு பிந்திய நிலையில் அறிவித்தது போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஒத்துழைக்க போவதாக முடிவானால் அது ஏனைய மூவருக்கும் தனித்து பயணிக்க வேண்டியநிலை ஏற்பட்டாலும் சாதகமானதாக அமையும். அவ்வாறன்றி பிராந்திய அரசியலை எதிரியாகவும் அதனை அணுகுபவர்களை தவறாகவும் பார்க்கும் மரபு தேர்தல் அரசியல் போல் பாராளுமன்ற அரசியலிலும் தொடருமானால் அனைத்து நகர்வுகளும் தோல்வியை நோக்கி செல்லும். அதனை வெற்றி கொள்வது இந்த மூவரது புத்திபூர்வமான முடிவிலேயே தங்கியுள்ளது.

ஐந்து இலங்கை தளுவிய தேசியக் கட்சிகளை நோக்கி தமிழ் மக்களது வாக்குகள் வடக்கு கிழக்கில் அதிகரித்து வருகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய வாக்குகள் தமிழ் தேசியத்தை முதன்மைப்படுத்தியவர்களிடம் சென்றதை விட இலங்கை தேசியக் கட்சிகளை நோக்கி போனதே அதிகமாகும். அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவமே இல்லாது போயுள்ளது. இலங்கை தேசியக்கட்சிகளுக்கும் அதன் ஆதரவான கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் ஆதரவளித்ததனால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் தமிழர் என்ற அடிப்படையில் பெருமைகொள்ள முடியும். இது காலம் காலமாக நிகழும் செயலாகவே தெரிகிறது. அதற்கு தமிழ் தேசியத்தை முதன்மைப்படுத்துபவர்களே பொறுப்பாளிகள். அந்த மக்களின் வலியை உணராத வரை தேசியத்தை மக்கள் பங்கேற்புக்குரியதாக மாற்றாத வரை இந்நிலை தொடரும். அதனை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் மக்களுடன் தமிழ் தேசியம் பேசுபவர்கள் ஒன்றிணைய வேண்டும். அவர்களது உரிமையையும் பொருளாதாரத் தேவையையும் நிறைவு செய்யப்பட வேண்டும். தேசியத்தையும் ஜனநாயகத்தையும் அபிவிருத்தியையும் உரிமையையும் ஒன்றிணைத்து செயல்படுத்துவதே தேவையாகும். சமானியர்களதும் அடிமட்ட மக்களதும் தேவைகளை தேர்தல் அரசியலோடு பார்க்காதீர்கள். போரின் வலியிலுள்ளவர்களது தேவைகளையும் அடிமட்ட மக்களது தேவைகளையும் நாளாந்தம் கவனிக்கவும் செயல்படுத்தவும் ஒரு பொறிமுறையை வகுத்து செயல்படும் வரை இலங்கைத் தேசியக் கட்சிகளை தடுக்க முடியாததுமட்டுமல்ல பல சுயேட்சைக் குழுக்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். அது தவர்க்க முடியாததது.

தேசியக்கட்சிகளின் உதவியிலும் ஒத்துழைப்பிலுமே அடிமட்ட சாதாரண மக்களது இருப்பு பாதுகாக்கப்படுகின்றது என்ற எண்ணத்தை புரிந்து கொள்வது அவசியமானது. இதனை நீடிக்கவிடுவார்களேயானால் தேசியக்கட்சிகளால் வடக்கு கிழக்கு முழுமையாக விழுங்கப்பட்டுவிடும். அந்த மக்கள் மீது குற்றம் சாட்டுவதை விட அவர்களது பிரச்சினைகளை தீர்க்க தமிழ் தேசியக் அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு அக்கட்சியால் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் கட்சியினரும் கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கு விதத்தில்’ செயல்படுதல் வேண்டும். தென் இலங்கையில் பலமான உறுதிமிக்க அரசாங்கம் நிறுவப்படுகிறது. அதனால் மூவரது செயல்பாடு இலகுவானதாக அமைய வாய்ப்பில்லாத சூழலே காணப்படுகிறது. இதனைக் கடந்து செயல்படுவதன் மூலமே கட்சிகளையும் தமிழ் மக்களையும் தக்கவைக்க முடியும்.

– கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்