கறுப்பு யூலை – யேர்மனியில் இருந்து தமிழமுதன்

438 0

ஒவ்வொரு நினைவுகூறலும் வந்துபோவது போல ஆடிமாதஇனப் படுகொலையும் தனது 37ஆண்டுகளைக் கடக்கக் காத்திருக்கின்றது. 37 வருடங்கள் கடந்த போதும் அதன் வலிகள், வடுக்கள் இன்றுவரை எம்மைவிட்டு அகலவில்லை.சிங்களப் பேரினவாத அரசின் இனஅழிவு நடவடிக்கைகள் 83ம் ஆண்டுக்கு முன்பும்சரி, பின்பும்சரி தனதுகோரமுகத்தைக் காட்டிக்கொண்டு இருக்கின்றது இவை எல்லாம் அவ்வப்போது நடந்த நிகழ்வுகள் இல்லாமல் படிப்படியாக நன்கு திட்டமிட்ட இனப்படுகொலைகளாகவே அமைந்தன.

இந்த இனப் படுகொலையின் தொடர்ச்சிதான் 2009ம் ஆண்டு ஒட்டுமொத்த இனப் படுகொலைகளாக நடந்தேறியது. இந்திய மேலாதிக்க ஆதரவோடும் சர்வதேசத்தின் மௌனமான ஆதரவோடும் தமிழ்த்;தரப்பில் இருந்த அரசுசார்பு சக்த்திகளின் துணையோடும் உலக மனிதநாகரிகம் தலை குனியக்கூடிய அளவுக்கு மிருகத்தனமான இனப்படுகொலைகள் நடாத்தி முடித்தது. தமிழ் மக்களின் உயிர்களைய் காவுகொள்வதில் மட்டுமின்றி அவர்களின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு என அனைத்தையும் அழித்தொழித்து முகமிழந்த மனிதர்களாக, ஒரு முகவரியிழந்த மனிதர்களாக்குவதில் இற்றைவரை குறியாகச்செயற்பட்டு வருகின்றது.

சில ஆண்டுகளுக்கு ஒரு முறைஎன்று இல்லாமல் ஒவ்வொரு நாளும் இனப்படுகொலை நாளாக மொழி, கலை, கலாசாரம், பண்பாடு எனஅனைத்தும் நாளாந்தம் அழிக்கப்பட்டிருக்கும் நாளாக நினைவுகூறவேண்டிய அளவுக்கு சிங்களப்பேரினவாதம் தமிழ்மக்கள்மீது தொடர்ச்சியான பன்முகம் கொண்ட தாக்குதல்களைத் தொடுத்துவருகின்றது. இந்தசிங்கள பேரினவாத பன்முகம்கொண்ட ஒடுக்குமுறைகள் நினைவு கூறப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டுமெண்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால் நினைவு கூறல் என்பது நினைவுகூறலுடன் நின்றுவிடாது நினைவுகூறுவற்கு தகுதியுடைய இனமாகத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய தேவையும் இருக்கின்றது. சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களின் மேற்கூறப்பட்ட வாழ்வியலை இழித்தொழிக்கின்றது என்று பார்த்தால் தமிழ்இனம் தன்னைவிடவும் எமது கலை, கலாச்சாரம், பன்பாடு என அனைத்திலும் அக்கறையற்று இருப்பது வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.

எதற்க்கு அழுவது? ஏதற்க்கு வருந்துவது? எதைநினைவு கூறுவது என்று தெரியாத அளவுக்கு இன்று எமது நிலை மாறியிருக்கின்றது இன்நிலைமாறி, எமதுகலை, கலாச்சாரம்,பண்பாடு,மொழி என்பனபாதுகாக்கப் படுவது மட்டுமன்றி பகுத்தறிவு உள்ள இனமாகத், தேடல் உள்ளஇனமாக ஒருவரின் கருத்துச் சுதந்திரத்துக்கும், அதைஒருவர் சுதந்திரமாகக் கூறும் உரிமைக்கும், மற்றவர் போராடக்கூடிய இனமாகத்தன்னை மாற்றிக்கொண்டு இந்த நாட்களை நினைவுகூறும்போதுதான் அது எமக்கும் எமக்காக உயிர் நீத்தவர்களுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்கமுடியும்.

யேர்மனியில் இருந்து தமிழமுதன்.