வேட்பாளர்களிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள்!

414 0

புதிதாக தெரிவுசெய்யப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மன்னாரில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறித்த அமைப்பின் செயலாளர் பி.சர்மிலா மடுத்தீன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியையும், உண்மைத்தன்மையையும் வெளிக்கொண்டுவரும் வகையில் தேர்தல் பிரசாரங்களை முன்வைத்து வாக்குறுதிகளை வழங்கிவருகின்றார்கள்.

குறித்த செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு ஓர் அழுத்தத்தைக் கொடுப்பதாக இருந்தாலும் இந்த பிரசார வாக்குறுதிகள் வெறுமனே தேர்தலில் வாக்குகளை சுவீகரிப்பதற்காக என்றல்லாது எங்கள் உறவுகளை பறிகொடுத்து நிற்கும் எங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாக்குறுதிகளாக அமைய வேண்டும்.

தேர்தலின், பின்பு மக்களால் தெரிவுசெய்யப்பட்டு ஆட்சிக்குவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கான நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும். அரசாங்கத்திற்கு அழுத்தத்தைப் கொடுக்கவேண்டும். நீதியுடன் செயற்பட வேண்டும்.

அத்துடன், சர்வதேசத்தின் ஊடாகவோ அல்லது உள்ளூர் பொறிமுறைகளுடாகவோ பாதிக்கப்பட்ட எமக்கு சார்பாக நின்று நீதிக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.