உலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா?

316 0

இலங்கைத்தீவிலே புரையோடிப்போயிருக்கும் சிங்கள உயரினவாத நோயினது தீர்வுக்குத் தடையாக இருப்பது பௌத்தமும் பௌத்தத்தைப் பின்பற்றும்(?) சிங்கள பௌத்த பிக்குகளும் என்பதை நீண்ட வரலாறு பதிவுசெய்தே வருகிறது. 1957இலே ஏற்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை 1958இலே கிழித்ததுமுதல் இன்றுவரை தொடரும் சிங்கள பௌத்த பிக்குகளின் தமிழின அழிப்பிற்குத் துணைநிற்பதைக் கண்டிக்கத் தவறியதன் விளைவே தீவின் துயரத்துக்குக் கரணியமாகவுள்ளதென்பது வெள்ளிடைமலை.

ஏன் இவர்களது அடாவடிகளை இலங்கையிலுள்ள ஏனைய மதத் தலைவர்கள்கூடக் கண்டிக்காதிருப்பது அச்சமா அல்லது அசமந்தப் போக்கா என்பதைப் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. பல மதங்களைப் பின்பற்றும் இலங்கைத்தீவிலே பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பது சனநாயகத்திற்கே இழுக்கானது என்பதுகுறித்து ஏன் ஒருவரும் வினாவெழுப்பவதில்லை. அசோக மன்னனின் வாரிசான மகேந்திரா என்ற மகிந்தரின் வருகையோடு இலங்கைக்கு வந்ததே பௌத்தமாகும். அது ஒன்றும் இலங்கைத்தீவிலே தானாகத் தோன்றிய மதமன்று.

மதம் பரப்பும் நோக்கோடு இலங்கையின் அனுராதபுரம் நகருக்கு வந்த மகிந்தர்(மகேந்திரா) சைவமன்னனான தேவநம்பியதீசனை மதமாற்றம் செய்ததைத் தொடர்ந்து பௌத்தமதம் இலங்கையிற் பரப்பப்பட்டது. அதாவது மன்னனது கட்டளைகளுக்கு அஞ்சி மக்கள் மதம்மாறினர் என்றே கொள்ள வேண்டும். சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் மற்றும் பல்வேறு மத நம்பிகைகளைப் பின்பற்றுவோர் வாழும் இலங்கையில் பௌத்தத்துக் முன்னுரிமை அளித்து ஏனைய மதங்களை இரண்டாந்தர நிலைக்குக் கீழிறக்கி வைத்துள்ளமை சனநாயகமா அல்லது சிங்கள பௌத்த சர்வாதிகாரமா? சிங்கள பௌத்த சர்வாதிகாரத்துக்கு எதிராக இலங்கையர்கள் மதங்களைக் கடந்து குரலெழுப்பாதவரை தீவிலே அமைதி வரப்போவதில்லை.

புத்தபெருமானின் போதனைகளைப் புறந்தள்ளியவாறு சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையூடே பயணிக்க முனையும் சிங்கள பிக்குகளின் வன்முறையை அரசுகள் மௌனத்தோடு பார்பதாகவோ பாராமுகமாக இருப்பதாகவோ கொள்ளமுடியாது. ஆட்சியாளருக்குத் துணையாகவும் சிங்கள அரசுகளின் அச்சாகவும் சிங்கள பௌத்தமும் உயரினவாதமுமே இருக்கிறதென்பதே மெய்நிலை.

பன்மைத்துவத்தைப் பேணவிரும்பும் ஒரு நாட்டிற்கு ஒற்றையாட்சி முறை பொருந்தாதென்பது நடுநிலையான அரசியலாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களது கருத்தாகும். அந்தப் பன்மைத்துவத்தின் பண்பியலாகப் பல்கட்சித் தேர்தல்முறை, ஆட்சிமுறை என்பது உலகின் பெரும்பாலான நாடுகளில் இயல்பானது. இலங்கைத்தீவும் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு நிற்கிறது. தேர்தல்களில் யாரும், எந்தக் கட்சியும் போட்டியிடும் உரிமை இருக்கிறது. கட்சிகள் தமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முன்வைக்கும் உரிமையும் இருக்கிறது. கட்சிகளும், குழுக்களும் அவற்றை உள்ளடக்கித் தேர்தல் விஞ்ஞாபனமாகத் தொகுத்து வெளியிடுவர். அப்படியொரு தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டபோது அதில் தேசிய இனப்பிணக்கிற்குச் சமஷ்டி முறையிலான தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பௌத்த பிக்குகளான கலகொட அத்தே ஞானசார தேரர்(செயலாளர்,பொது பல சேனா) இத்தானந்தே சுகத தேரர் மற்றும் ஓமல்பே சோபித தேரர் போன்றோர் கூட்டாகச் சிங்கள அரசு தருவதைப் பெற்றுக் கொண்டு பேசாமல் வாழவேண்டும், இல்லையேல் வட-கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று தமிழர்களை அச்சுறுத்தியமையானது, உண்மையிலே இவர்கள் உண்மையான பௌத்தர்கள்தானா எனச் சிந்தேகிக்கவேண்டியுள்ளதோடு, இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள பௌத்த நாடாக மாற்றும் திட்டத்தோடு பௌத்தர்கள் வாழாத தமிழர் பிரதேசமெங்கும் அத்துமீறி விகாரைகள் அமைப்பது முதல் புத்தரது திருஉருவச்சிலைகளை வைப்பது போன்றவற்றையும் வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, உண்மையாகவே புத்தரின் போதனைகளைப் பின்பற்றும் உலகு வாழ் பௌத்தர்களும் பௌத்த அமைப்புகளும் புத்தரின் பஞ்சசீலக் கொள்கைக்கு எதிராக இலங்கைத்தீவிலே பௌத்தர்கள் வாழாத தமிழர் பிரதேசமெங்கும் அத்துமீறிய விகாரைகள் அமைப்பது முதல் புத்தரது திருஉருவச்சிலைகளை வைப்பதோடு மாற்று இன மதத்தவரை அச்சுறுத்தி ஆக்கிரமிப்புச் செய்தல் போன்ற அநாகரிகச் செயற்பாடுகளால் அமைதியைக் குழப்புவோரான சிங்கள பிக்குகளைக் கண்டிக்காதிருப்பதை ஈழத்தமிழினம் கவலையோடு உற்றுநோக்குகிறது என்பதையும் பதிவுசெய்கின்றோம்.
நன்றி.
குறியீடு இணையம்.