சிறிலங்காவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தமையால்தான் இனவாதியாக பார்க்கப்பட்டேன்- விஜயதாச

245 0

சிறிலங்காவில் கடந்த அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தமையால், இனவாதியாக பார்க்கப்பட்டேன் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் விஜயதாச ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதூக்கியுள்ளமை தொடர்பாக பலமுறை நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்தினேன்.

இவ்வாறு தகுந்த ஆதாரங்களுடன் என்னால் குறிப்பிடப்பட்ட விடயங்களை எவரும் கண்டுகொள்ளவில்லை.  ஆனால் நான்  கூறிய  அனைத்து விடயங்களும் கடந்த 2019  ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் நிகழ்ந்தது.

மேலும் அடிப்படைவாதிகளுடன் அரசியல்வாதிகள் சிலரும் தொடர்புப்பட்டுள்ளார்கள் என்று கூறியதைக் கூட அப்போதைய அரசாங்கத்தில் உயர்பொறுப்பில் இருந்தவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக என்னை இனவாதியாகவும் நல்லிணக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவனாகவும் சித்தரித்தனர்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் அடிப்படைவாதிகளை ஒருபோதும் இணைத்துக் கொள்ளமாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.