புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை

258 0

புள்ளடியிடப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்த, மூதூர் கல்வி வலயத்துக்குரிய பாடசாலையொன்றின் ஆசிரியருக்கு எதிராக நாளை (20) மூதூர் நீதவான நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதென, மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதம் 15ஆம் திகதி தபால்மூல வாக்களிப்புக்காக மூதூர் கல்வி வலய அலுவலகத்துக்கு வருகைத் தந்ததுடன், வாக்களிப்பின் பின்னர் அச்சீட்டைப் புகைப்படம் எடுத்துள்ளார்.  இதனையடுத்து அவரின் அலைபேசியை தேர்தல் அதிகாரிகள் பொறுப்பேற்று,மேலதிக விசாரணைகளுக்காக மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகன் வாக்களிப்பு என்றால் என்ன என்பது குறித்து, விசாரிப்பதால் அவருக்கு விளக்கமளிப்பதற்காகவே வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்துள்ளதாக அந்த ஆசிரியர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் வாக்குசீட்டை வைத்திருத்தல், அதனைப் புகைப்படம் எடுத்தல் என்பன 1981 இலக்கம் 1 என்ற நாடாளுமன்ற தேர்தல் விசாரணை சட்டத்தின் 66 இன் உறுப்புரைக்கமைய தண்டனைக்குரிய குற்றமென, கிழக்கு மாகாண உதவி தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் தெரிவித்துள்ளார்.