இனவாதம் கக்கும் சிறிலங்காவின் பௌத்த பிக்குகள்!

61 0

monk-warnசிறிலங்காவின் அதிகாரத்துவ பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களுக்கும்,  தமிழர்களுக்கும்  இடையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு வந்தது.

இந்த யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இவ்விரு இனத்தவர்களுக்கும் இடையில் மீளிணக்கம் ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக சில பௌத்த பிக்குகளால் அண்மையில் இனவாதம் கலந்த வசைமொழிகள் பேசப்பட்டதானது நாட்டில் எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது.

தமிழ் கிராம சேவகர் ஒருவரை  பௌத்த பிக்கு ஒருவர் இனத்துவேசம் நிறைந்த கெட்ட வார்த்தைகளால் திட்டி அவரை எச்சரிக்கின்ற அந்தக் காட்சியை, காவற்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காது,வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதை உள்ளடக்கிய காணொலி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று ‘சிங்களவர்களின் மீட்பர்’ எனத் தன்னைத் தானே கூறிக்கொண்ட ஒருவர் கைதுசெய்யப்பட்ட போது,  அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த மதகுரு ஒருவர் இந்த ஆர்ப்பாட்டம் இரத்தக்களரிக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை செய்த பிறிதொரு சம்பவமும் நடந்துஉள்ளது.

இவ்வாறான இனவாதத் தாக்குதல்கள் மதம் என்பதற்கு அப்பால் இனவாதத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த தமிழர்கள், இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என அனைவரும் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர்.

சிறிலங்காவின் 20 மில்லியன் மக்கள் தொகையில் 70 சதவீதமானவர்கள் பௌத்தர்களாவர். அத்துடன் 13 சதவீதத்தினர் இந்துக்களாகவும், கிட்டத்தட்ட 10 சதவீதத்தினர் முஸ்லீம்களாகவும் உள்ளனர்.

2015 தொடக்கம் சிறிலங்காவில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு எதிராக 132 வன்முறைச் சம்பவங்களும் முஸ்லீம்களுக்கு எதிராக 141 வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக ‘இனப் பாரபட்சங்களைக் களையும் ஆணைக்குழுவிற்கு’ கூட்டு சிவில் சமூகத்தால் 2016 ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மதத் தலங்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மை மத சமூகங்கள் மீதான தாக்குதல்கள் போன்றனவும் இந்த வன்முறைச் சம்பவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை காலமும் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபட்ட எவருக்கும் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பது மிகவும் மோசமான ஒரு செய்தியாகும்.

‘சிறிலங்காவில் வாழும் அனைத்துக் குடிமக்களும் சமமாகவும், பாரபட்சமற்ற வகையிலும், மதசுதந்திரத்துடனும், தத்தமது மதங்களை சுதந்திரமாக வணங்குவதற்குமான உரிமையைக் கொண்டுள்ளனர் என நாட்டின் அரசியல் சாசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் வாழும் மத மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தால் மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகளே தலைமை தாங்குகின்றனர். ஆனால் இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சிவில் சமூகக் குழுக்கள் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு அறிக்கையிட்டுள்ளனர். எனினும் இவ்வாறான வசைமொழிகளையும் இனவாதக் கருத்துக்களையும் கூறும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக சிறிலங்கா சட்டத்தின் கீழ் எவ்வித தண்டனைகளும் வழங்கப்படவில்லை’ என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெறும் பாரபட்சங்களுக்கு எதிராகவும் பௌத்த பிக்குகள் உட்பட இனவாதம் மற்றும் வசைமொழி பேசுபவர்களை இனங்கண்டு அவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என கத்தோலிக்க மற்றும் இந்து மத தமிழ்க் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ள போதிலும் இது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

சிறிலங்காவானது தற்போது பல பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தத்தின் பாதிப்புக்களிலிருந்து தன்னை மீட்டெடுத்து வருகிறது. உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள அதிலிருந்து மீண்டெழுந்தவர்கள் இனிவருங் காலங்களில் நம்பிக்கையுடன் வாழ்வதற்கேற்ற வகையில் சட்டங்களும் நிறுவகங்களும் செயற்பட வேண்டிய காலகட்டமாகும்.

ஆனால் இனிவருங் காலங்களில் அதாவது போருக்குப் பின்னான முதலாவது தலைமுறையினர் சிறிலங்காவின் ஆட்சிப்பீடத்திற்கு வரும்போது என்ன நடக்கும் என்பதற்கு இவ்வாறான இனவாத பௌத்த சிங்களவர்களால் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் முதலாவது சமிக்ஞையாக  உள்ளது.

இஸ்லாமிய அரசு என அழைக்கப்படும் ‘ISIS’ உடன் இணைவதற்காக சிறிலங்காவைச் சேர்ந்த 32 முஸ்லீம்கள் சிரியாவிற்குப் பயணம் செய்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார்.

‘இந்த 32 முஸ்லீம்களும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் படித்த மற்றும் செல்வந்த முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் எனவும் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்த நாட்டில் ISISதொடர்பாக பாரியதொரு அச்சம் காணப்படுகிறது. இந்த நாட்டிலும் இவ்வாறானதொரு தீவிரவாதத்தை விதைக்க யாராவது முற்பட்டால் அதனை நாம் இன்றிலிருந்து தடுத்து நிறுத்த வேண்டும். இந்த நாட்டுச் சட்டமானது பௌத்த பிக்குகளுக்கோ அல்லது சாதாரண மக்களுக்கோ வேறுபட்டதல்ல’ என விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா முஸ்லீம் பேரவை நீதி அமைச்சரின் இந்தக் கருத்தை முற்றிலும் நிராகரித்தது. ‘நாங்கள் அமைச்சரின் இத்தகைய தவறான கருத்தை ஏற்கமறுக்கிறோம். அமைச்சரின் இந்தக் கருத்தானது ஒரு ஆண்டின் முன்னர் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர் ISIS உடன் இணைந்து போராடி மரணித்த போது ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்களாகும். இதன் பின்னர் இவ்வாறு எவரும் இந்த அமைப்புடன் இணைந்ததற்கான சாட்சியங்கள் வெளியிடப்படவில்லை. ஆகவே இந்நிலையில் அமைச்சரின் கருத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என முஸ்லீம் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவானது தற்போது உள்நாட்டு யுத்தத்திலிருந்து மீண்டு வரும் ஒரு நாடாகும். இந்த நாட்டில் வாழும் பௌத்தர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லீம்கள் என அனைவரும் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

இந்த மக்கள் உள்நாட்டு யுத்தத்திலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் புதிய சட்டங்களையும் புதிய நிறுவகங்களையும் உருவாக்க முயற்சிக்கின்றன. இவ்வாறானதொரு பயங்கரம் இந்த நாட்டில் மீண்டும் ஏற்படாத வண்ணம் இந்த சட்டங்கள் இருக்க வேண்டும்.

புதிய தலைமுறையினர் ஆட்சிக்கு வரும்போது இவ்வாறான மத மற்றும் இனவாத வேறுபாடுகள் நீக்கப்படும். ஆகவே தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்க சில தீயசக்திகள் முயற்சிக்கின்றன.

ஆங்கிலத்தில்  – JOHN J. XENAKIS
வழிமூலம்        – Breitbart
மொழியாக்கம்  – நித்தியபாரதி