சிறிலங்காவில் 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி முறிகள் மோசடியில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு செய்ய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உட்பட 7 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அத்தோடு அவ்வாறு பதிவு செய்யப்பட்ட அறிக்கைகளை ஜூலை 25 க்கு முன் சமர்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார் என சட்டமா அதிபர் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில், மத்திய வங்கி மோசடி தொடர்பாக ரவி கருணநாயக்க உட்பட 07 பேரை கைது செய்வதற்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை செயற்படுத்துவதை நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
குறித்த மோசடிகள் குறித்த சட்டமா அதிபர் வழங்கிய சமர்பணங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் நீதிமன்றம் ரவி கருணாநாயக்க உட்பட 10 சந்தேக நபர்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

