கிளிநொச்சி வாழ் மக்களுக்கு சுகாதாரப் பகுதியினர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

219 0

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியிலுள்ள யாழ். பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் கிளிநொச்சி வாழ் மக்கள் மிகுந்தஅவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கம்பஹாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சகோதரருக்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவருடைய சகோதரி கடந்த 8 ஆம் திகதி கம்பஹாவில் இருந்து ரயில் மூலம் மதவாச்சி வரையிலும், மதவாச்சியில் இருந்து கிளிநொச்சி வரையும் பஸ்ஸிலும் பயணம் செய்திருக்கின்றமையால், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்த பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருத்தல் வேண்டும்.

அதே நேரத்தில் கொரோனாப் பெருந்தொற்று அபாயம் மீண்டும் தோன்றியிருப்பதனால் அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுதல், அவசியமின்றிப் பொது இடங்களில் கூடாதிருத்தல், அவசியமற்ற பொது நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என்பவற்றை தவிர்த்துக்கொள்ளல் போன்ற அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, தற்போது நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதனால் மூக்கு , வாய் என்பவற்றை மூடிக்கொள்ளும் வகையில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது