சிறிலங்காவில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

229 0

சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர் ஒருவருக்கு விடுமுறை தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொழில் தருநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1981ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 122ஆம் பிரிவின் அடிப்படையில், வாக்காளர் ஒருவருக்கு தேவையான விடுமுறை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், வாக்களிப்பிற்காக விடுமுறை கோரி விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில், நான்கு ங்களுக்குக் குறையாத, சம்பளத்துடன் கூடிய, விடுமுறையொன்று வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு விடுமுறை பெறுபவர்களின் விபரங்கள், வேலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்களிப்பதற்கான விடுமுறைக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதிருத்தல், உரிய விடுமுறைக் காலத்தை வழங்காதிருத்தல், வாக்களிப்புக்கான விடுமுறைக்காக சம்பளம் வழங்காதிருத்தல், விடுமுறைக்காக விண்ணப்பிப்பதற்காக, வாக்காளர் அட்டையை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தல் மற்றும் வாக்களிப்புக்காக விடுமுறை பெற்றால் தொழிலை இழக்க நேரிடும் என எச்சரித்தல் ஆகியன குறித்து கடந்த காலங்களில், முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த விடயத்துக்காக ஊழியர் ஒருவரினால் கோரப்படும் விடுமுறையை வழங்காதிருத்தல், நீதவான் நீதிமன்றமொன்றில், வழக்குத் தாக்கல் செய்து தண்டனை வழங்கக்கூடியதொரு குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது விடுமுறைக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக, வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்காளர் அட்டையை மீளக் கோரும் பட்சத்தில், அதனை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு,  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, தனக்கு விடுமுறை வழங்கப்படாமை குறித்து வாக்காளர் ஒருவர் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கும் பட்சத்தில், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் ஆணையாளர் ஆகியோரின் ஊடாக, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.