வடக்கின் களம் யாருக்கு பலம்?

385 0

சற்றுத் தணிந்திருந்த கொரோனா மீண்டும் வெளிக்கிளம்பி நாட்டை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள போதும் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தீவிர தேர்தல் பிரசார யுத்தத்தில் களமிறங்கியுள்ளன . வழக்கம் போலவே இம்முறையும் சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம்,முஸ்லிம் இனவாதம் என்ற ஆயுதங்கள் மூலமே தேர்தல் பிரசார யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் என்று கூறுவதை தவிர்த்து தமது எதிரிக்கட்சிகள் மீது வசைபாடும்,சேறுபூசும் குற்றம்சாட்டும் பிரசாரங்களும் அதிகளவில் இடம்பெறுவதனால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நடக்கப்போகும் தேர்தல் தொடர்பில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டதுடன் வடக்கு,கிழக்கு மக்களுக்கு இந்த தேர்தலில் ஆர்வம் இல்லை என்ற விடயத்தையும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய விடயம் உண்மையே .இந்த தேர்தல் பிரசார யுத்தத்தில் வடக்கு மாகாண கள நிலைவரமும் கவலைக்கிடமாகவே உள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் கூறியதுபோல் இந்த தேர்தலில் வடக்கு,கிழக்கு மக்களுக்கு குறிப்பாக வடக்கு மக்களுக்கு ஆர்வம் இல்லாதபோதும் ஆர்வம் உள்ள மக்களின் வாக்குகளைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இங்கு வழக்கத்துக்கு மாறாக இம்முறை கட்சிகளுக்கிடையில் கடுமையான தேர்தல் போட்டி ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் பிரசார யுத்தத்தில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய இரு பிரதான கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ்-கிளிநொச்சி இணைந்த தேர்தல் மாவட்டம்,வன்னி தேர்தல் மாவட்டம் என இரண்டு தேர்தல் மாவட்டங்களே உள்ளன. இதில் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 571,848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 28 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 287,024 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த இரு மாவட்டங்களுக்குமான 13 ஆசனங்களை தமதாக்கிக் கொள்வதற்காகவே 735 வேட்பாளர்கள், 858872 வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக களமிறங்கி பிரசார சமராடி வருவதனால் இம்முறை வடக்கு மாகாணத்தில் வாக்குகள் சிதறப்போகும் நிலையும் இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்த சில உறுப்பினர்களுக்கு இம்முறை அவர்களின் ஆசனங்கள் பறிபோகும் கள நிலைவரத்தையும் வடக்கில் காண முடிகின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வடக்கிலிருந்து 13 பேர் பாராளுமன்றம் சென்றனர். இதில் 11 பேர் தமிழ் கட்சிகளை பிரதிநிதிதித்துவப்படுத்திய தமிழர்களாகவும் இருவர் இரு பிரதான சிங்களக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம்களாகவும் பாராளுமன்றம் சென்றனர். இதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் யாழ் -கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திலிருந்து 5 பேரும் சிங்களக்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து தமிழர் ஒருவரும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியான ஈ.பி.டி.பி.யிலிருந்து ஒருவருமான 7 பேரும் வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் 4 பேரும் சிங்களக்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து முஸ்லிம் ஒருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து முஸ்லிம் ஒருவருமென 6 பேரும் பாராளுமன்றம் சென்றனர்.

வடக்கு தேர்தல் களத்தில் கடந்த முறை களமிறங்கிய அதே அரசியல் கட்சிகள் இம்முறையும் களமிறங்கியிருந்தால் வாக்குகளும் சிதறியிருக்காது.தேர்தல் முடிவுகளும் மாறும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் இந்த பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற புதியதொரு கட்சி பலமானதொரு மாற்று அணியாக களமிறங்கியுள்ளதே வடக்கில் கடும் தேர்தல் போட்டியொன்றை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் களமிறக்கத்தால் இதுவரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அடைமொழியைப் பயன்படுத்தி தமது பாராளுமன்ற ஆசனங்களை தக்க வைத்து வந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்தான் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து பிரிந்த மக்கள் பலமுள்ளவர்களின் கட்சியாக விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இருப்பதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வாக்கு வங்கிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே யாழ்,வன்னி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்த சிலரின் பாராளுமன்ற ஆசனங்கள் பறிபோகும் வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.

அதேவேளை வடக்கில் போட்டியிடும் ஏனைய கட்சிகளுக்கென்றுள்ள வாக்கு வங்கிகள் குறிப்பாக ஈ.பி.டி.பி ,ஐ,தே.க., ஸ்ரீல .சு.க., பொதுஜன பெரமுன ஆகியவற்றின் வாக்கு வங்கிகளும் இக்கட்சியின் வரவினால் சரியக்கூடிய கள நிலையும் உண்டு. இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் அதன் தலைவர்களான சிலர் மீதும் கொண்ட வெறுப்பின்,வேதனையின் காரணமாக மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து வந்த மக்கள் இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிகரான மாற்று அணியாக களமிறங்கும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடிய சூழலும் காணப்படுவதனால் இக்கட்சிகள் வாக்கு வங்கிகளும் சரிவை சந்திக்கலாம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எஸ்.ஸ்ரீதரன் 72058 வாக்குகளையும் மாவை சேனாதிராஜா 58782வாக்குகளையும் எம்.ஏ .சுமந்திரன் 58043 வாக்குகளையும் த .சித்தார்த்தன் 53740 வாக்குகளையும் ஈ.சரவணபவன் 43289 வாக்குளையும் பெற்று பாராளுமன்றம் தெரிவாகினர் .அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் விஜயகலா மகேஸ்வரன் 13071 வாக்குகளையும் ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா 16399 வாக்குளையும் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.

இதேபோன்று வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சார்ள்ஸ் நிர்மலநாதன் 34620 வாக்குகளையும் செல்வம் அடைக்கலநாதன் 26397 வாக்குகளையும் சிவசக்தி ஆனந்தன் 25027 வாக்குகளையும் சிவமோகன் 18412 வாக்குளையும் பெற்ற அதேவேளை ஐ.தே .க.வில் போட்டியிட்ட ரிசாத் பதியுதீன் 26291 வாக்குளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட காதர் மஸ்தான் 7298 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.

இதில் முதலில் யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை கவனத்தில் எடுத்தால் கடந்த முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பு 5 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் இம்முறை அதில் 2 ஆசனங்களை இழக்க வேண்டிய கள நிலைவரம் உள்ளது.

ஏனெனில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 2013 ஆம் ஆண்டு களமிறங்கிய சி.வி.விக்னேஸ்வரன் 1,32,255 விருப்பு வாக்குகளைப்பெற்றிருந்தார். அதே கட்சியில் போட்டியிட்ட அனந்தி சசிதரன் 87,870விருப்பு வாக்குளைப் பெற்றிருந்தார். 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அருந்தவபாலன் 42 925வாக்குகளைப் பெற்று ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார்.அதேவேளை சுரேஷ் பிரேமச்சந்திரனும் கூட்டமைப்பில் போட்டியிட்டு 25000 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நான்கு பேரும் இம்முறை தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ளதால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குரிய வாக்குகள் பிரிந்து குறைந்தது 2 ஆசனங்களை அது இழக்கும் நிலைமையில் உள்ளது.

அதேபோன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்னி மாவட்டத்திலும் ஒரு ஆசனத்தை இழக்கும் நிலை உள்ளது. ஏனெனில் கடந்த தேர்தலில் இக்கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான 4 பேரில் 25027 வாக்குளைப் பெற்று மூன்றாவது இடத்திலிருந்த சிவசக்தி ஆனந்தன் இம்முறை விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் களமிறங்கி உள்ளார். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னியிலும் ஒரு ஆசனத்தை இழக்கும் நிலையுள்ளது.</p>
<p>எனவே வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 13 ஆசனங்கள் உள்ள நிலையில் கடந்த தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 9 ஆசனங்களைப் பெற்றிருந்தபோதும் இம்முறை அது 6 ஆகக் குறைவடைவதுடன் அந்த 3 ஆசனங்களையும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பெற்றுக்கொள்ளும் களநிலைவரமே உள்ளது. ஏனைய 4ஆசனங்களையும் ஈ.பி.டி.பி.,ஐ.தே .க.,பொதுஜன பெரமுன பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கான தேர்தலில் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 207577 வாக்குகளைப்பெற்று 5 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி. 30232 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் ஐக்கிய தேசியக்கட்சி 20025 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன. அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17309 வாக்குகளைப்பெற்றிருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று சக்தி தாமே எனக் கூறிவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் [தமிழ் தேசிய மக்கள் முன்னணி] 15022 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

அதேவேளை வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 89886 வாக்குகளைப்பெற்று 4ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 39513 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 120965 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன. இந்த ஆசனங்கள்,வாக்குகளின் எண்ணிக்கையிலேயே இம்முறை மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதன் மூலம் தமிழ்தேசியக்கூட்டமைப்பே அதிக நெருக்கடியை சந்திக்கவுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அதிலுள்ள பங்காளிக்கட்சிகளின் சண்டை,வெளியேற்றங்களினால் அது பலவீனமடைந்து நிலையில் உள்ளது. அத்துடன் அக்கூட்டமைப்பின் தாய்க் கட்சியாகக் கருதப்படும் இலங்கை தமிழரசுக்கட்சியும் தற்போது உட்கட்சிப் பூசல்களினால் கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. அதிலுள்ள ஒரு சிலரின் தான்தோன்றித்தனமான,தமிழ்மக்களை விசனமடைய வைத்த கருத்துக்கள்,செயற்பாடுகள் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவமோ அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைத்துவமோ இதுவரையில் அவ்வாறானவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமையே இவ்விரு கட்சிகள் மீதும் தமிழ் மக்களை அதிருப்தி கொள்ள வைத்துள்ளன. இந்த அதிருப்தி ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் வெளிப்படுமா?
தாயகன்