படையினரும் புலனாய்வாளர்களும் வடக்கில் திட்டமிட்டு முட்டுக்கட்டை : தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குற்றச்சாட்டு

284 0

பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்க ஆரம்பித்துள்ள நிலையில் வடக்குமாகாணம் முழுவதும் படையினரும், புலனாய்வாளர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளினதும், வேட்பாளர்களினதும் தேர்தல் செயற்பாடுகளுக்கு திட்டமிட்ட வகையில் முட்டுக்கட்டடைகளை ஏற்படுத்தி வருவதாக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்

அத்துடன் ஆளும் தரப்பு ஆதரவாக படையினரும், புலனாய்வுப்பிரிவினரும் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் அதேநேரம், தங்களது மக்கள் பிரசாரத்தினை தடுக்கும் வகையில் அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் தாம் பிரசார நடவடிக்கைகளுக்கு செல்கின்றபோது பின்தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளார் சுரேஷ்பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே மேற்கண்டவாறு குற்றச்சாடடுக்களை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், வடக்கில் எமது வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக செல்கின்றபோது அவர்களை புலனாய்வாளர்கள் பின்தொடர்வதாகவும் அவர்கள் சந்தித்து கலந்துரையாடும் மக்களிடத்தில் என்ன பேசுகின்றார்கள் போன்று விசாhரணைகளை மேற்கொள்வதாகவும் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். அதுமட்டுமன்றி எனது சந்திப்புக்கள் தொடர்பிலும் படையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் அறிய முடிந்துள்ளது. இது முற்றுமுழுதாக ஜனநாயகத்தினை மீறுகின்ற செயற்பாடாகும் என்றார்.

சுரேஷ்பிரேமச்சந்திரன் கூறுகையில், வடக்கில் குறிப்பாக நான் உட்பட எமது கூட்டணியின் வேட்பாளர்கள் செல்லுமிடமெல்லாம் புலனாய்வாளர்கள் பின்தொடர்கின்ற நிலைமை காணப்படுகின்றது. வடக்கில் ஏங்கனவே ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர்களின் பிரசன்னமும் அதிகமாக உள்ளது. மேலும் நாம் தேர்தல் பிரசாரத்திற்காக மக்களுடன் சிறுசந்திப்புக்களை ஏற்பாடு செய்கின்றபோதும் படையினர் மற்றும் புலனாய்வாளுர்கள் அவ்விடத்தில் பிரசன்னமாகுவதன் காரணத்தினால் மக்கள் ஒன்றுகூடுவதற்கே அச்சமடைகின்றனர். இந்த செயற்பாடானது முற்றுமுழுதாக அடக்குமுறையைப் பிரயோகித்து தேர்தல் வெற்றியைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது என்றார்.

இதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில், எமது தேர்தல் பரப்புரைகளை இராணுவம் திட்டமிட்ட வகையில் தடைசெய்வதற்கே முனைந்து வருகின்றது. குறிப்பாக எமக்கான அங்கீகாரத்தினை தமிழ் மக்கள் வழங்கிவிடக்கூடாது என்பதை மையப்படுத்தி இந்த செயற்பாடுகள் அமைகின்றன. எமது அலுவலகங்கள், வேட்பாளர்கள் என்று அனைவருமே நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே செயற்படுகின்றார்கள் என்றார்.

சித்தார்தன் தெரிவிக்கையில், படையினரும், புலனாய்வாளர்களும் ஆளும் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகின்றார்கள். அவர்களுக்காக சுவரொட்டிகளை, பதாகைகளை காட்சிப்படுத்தி பிரசாரம் செய்கின்றார்கள். மக்களிடத்தில் சென்று ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக கூற அப்பட்டமான தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படுகின்றார்கள். இவர்களின் செயற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் நன்கறிந்தும் மௌனமாக இருக்கின்றார்கள் என்றார்.

மேலும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் திடீர் சோதனைச்சாவடிகள் முளைத்திருந்தன. இவை தற்போது நிரந்தரமாகவிட்டன. சட்டம் ஒழுகை கட்டுப்படுத்துவதாக கூறியவாறு இந்த சாவடிகளை வைத்திருக்கும் படையினர் தேர்தல் செயற்பாடுகளையும் மக்களின் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்துவதே இலக்காக கொண்டிருக்கின்றார்கள். விசேடமாக வடக்கு தற்போது இராணுவ மயமாக போர்க்காலச் சூழலில் மக்கள் இருப்பதுபோன்று உள்ளார்கள் என்றார்.