புலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்.- தமிழமுதன்.

753 0

ஏதோவந்திட்டம் கொஞ்சக்காலம் இருந்து உழைச்சுக்கொண்டு நாட்டுக்கு திரும்பிப்போவம் ஒவ்வொரு தமிழரும் புலம்பெயர்ந்த ஆரம்பத்தில் உச்சரித்த வார்த்தைதான் இது.
உழைப்பு என்பது ஒருபுறம் இருக்க வாழ்வுமட்டுமல்ல மரணம் கூட இங்குதான் என்பதை முப்பது வருடகால ஆயுதப்போராட்டமும் இன்றைய அரசியல் நிலமைகளும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

சிங்கள பேரினவாத அரசுகளால் எமது ஆயுதப்போராட்டம் ஆயுதரீதியாக பலவீனப்படுத்தப் பட்டதிலிருந்து இன்றுவரை எமது தமிழ் அரசியல் தலைமைகள் உயிரை அர்ப்பணித்தவர்களுக்கோ உயிரோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கோ குறைந்தபட்ச நாடாளுமன்ற சட்டவறைக்குட்பட்டுச் செய்யக்கூடிய விடயங்களைக் கூடசெய்யவில்லை. மாறாக மிகவும் அயோக்கியத்தனமான அநாகரிகமான அரசியலைச் செய்து கொண்டிருப்பதையே நாங்கள் தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றோம். அதன்உச்சக்கட்டமாக இன்றையகாலகட்டம் அமைந்திருக்கின்றது இந்த அயோக்கியத்தன அநாகரீகஅரசியலை அனைத்துத்தமிழ் அரசியல்கட்சித் தலைமைகள் செய்தாலும் அதன் அதிஉச்சக்கட்டமுரண்களாக சுமந்திரனையும்
சிறீதரனையும் பார்க்கவேண்டி இருக்கின்றது.

இதில் சிறீதரன் ஆரம்பகாலங்களில் கூட்டமைப்பிற்குள் ஓரளவு உண்மையை பேசக்கூடியவராக இருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இன்று சுமந்தரனின் பிரதிநிதித்துவம் என்பதையும் அதற்கு அவர்கூறும் காரணங்களையும் பார்க்கும் போது சாக்கடைக்குள் இறங்கினால் அதுசாக்கடை என்றுதெரியும்போது அதிலிருந்துவெளியேறவேண்டும் அல்லது சாக்கடையிடம் சரணாகதி அடையவேண்டும்)சாக்கடையிடம் சரணாகதி அடைந்துவிட்டார் என்பது அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய விடயமாக இருக்கின்றது.75 கள்ளவாக்குகள் போட்டேன் என்று ஒரு நேர்காணலில் இலங்கையின் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்சொல்கிறார் என்றால் அதேசிறீதரன் இந்தநாடாளுமன்றத் தேர்தலிலும் தனக்கு வாக்குஅளிக்கவேண்டும் என்றும்சொல்கிறார் என்றால் அயோக்கியத்தனமும் அநாகரிகமும் எவ்வளவுதூரம் எல்லை கடந்து நிற்கின்றது என்பதை உலகத் தழிழர்கள் புரிந்துகொள்ள
வேண்டும்.

இத்தகையவர்களை தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். அவை எல்லாவற்றையும் யோக்கியமான நாகரீகமான அரசியலாக எண்ணி மௌனம் சாதிக்கும் தமிழத்தேசிய கூட்டமைப்புக்கு இந்தநாடாளுமன்ற தேர்தலில் வரலாறுகாணாத படிப்பினையைக் கொடுக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாக இருக்கின்றது. ஆனால்
அதற்குரிய செயற்பாடுகளில் இறங்குவதற்கு தாயகத்தின் களநிலமைகள் சாதகமாக இல்லை.பாதுகாப்பு படையினரின்அச்சுறுத்தல், புலனாய்வுப்பிரிவினரின் கண்காணிப்பு போன்றவற்றின் மத்தியில் வலுவான செயற்பாடுகளில் இறங்க முடியாமல் இருக்கின்றார்கள்.

அத்தோடு புலம்பெயர் தேசத்து தமிழ்மக்களோடு ஓப்பிடும்போது செய்திகள் அவர்களைச் சென்றடைவதும் குறைவாகவே காணப்படுகின்றது.போராட்டகளத்திலும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வாழ்வதால் அரசியல் குறித்த தேடல்களும் குறைவாகவே காணப்படுகின்றது.ஆனால் அரசியல் தேடல்கள் நிறைந்த சூழலில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் எமது ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் தலைமையாக விளங்கி போராட்டத்தைச்சரியான திசையில் பயணிக்கவைக்க கூடியஅனைத்து அரசியல் வழிமுறைகளைக் கொண்டிருந்தும்,போராட்டக்கள வெற்றிகளை கொண்டாடுவதிலும் உழைக்கும்பணத்தில் ஒருசிறுதொகையைச்செலுத்திவிட்டு தான் இந்த அமைப்பைச் சார்ந்தவன் என்று மார்தட்டிக்கொள்வதிலும், போராட்டம் சம்பந்தமாக நாட்டில் இருந்து வரும் செய்திகளைக் கேள்விக்குட்படுத்தாமல், ஆய்வுக்குட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொண்டதுமான நிலமைகள் எமது போராட்டம் இந்த நிலமை அடைந்ததற்கான காரணிகளில் ஒன்று என்பதை ஒவ்வொரு புலம்பெயர்தமிழரும் தார்மீகப் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே புலம்பெயர் தமிழர்கள் தாம்விட்ட தவறுகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு அரசியல் களமாடவேண்டும். இந்த 70ஆண்டு கால அரசியலில் ஆயுதச்செயற்பாடு குறித்து
கருத்துப்போர் நடாத்த வேண்டும். அமைப்பு சார்ந்தவர்கள், தமிழ் தேசியத்தின் பால் அக்கறை கொண்டவர்கள் “கருத்துப் போர்க்களத்தில்” சந்திக்கவேண்டும்.இந்த கருத்துப்போர் தமிழ் மக்கள் ஓர் அரசியல் சக்தியாக அமைப்புவடிவம் பெறுவதற்கு வழிவகுக்க வேண்டும். இந்த அடிப்படை இல்லாமல் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்து ஒரு அடிகூட முன்பின் வைக்கமுடியாது என்ற வரலாற்று உண்மையை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த நீண்ட அரசியல் உரிமைக்கான செயற்பாடுகள் நோக்கி நகரவேண்டிய அதேவேளை இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்கள் முன்னால் ஓர் அவசியமான, அவசரமான கடமையை இன்றைய தேர்தல்களம் முன்னிறுத்தி இருக்கின்றது. அதாவது தமிழ்மக்களின் அரசியல்உரிமைகளுக்கு எதிராகச்செயற்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வரலாறு காணாத தோல்விக்கு உட்படுத்துவது எம்முன் உள்ள உடனடிக் கடமையாக இருக்கின்றது. அந்தவகையில் புலம்பெயர் தமிழர் ஒவ்வொருவரும் தாயகத்தில் வாழும் தங்களது உறவுகளுக்குத் தெரியப்படுத்த வேண்டியவையாவன.

1)தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வாக்கு செலுத்த வேண்டாம் என கோருதல்.
2)கூட்டமைப்புத் தவிர்ந்த உங்கள் தொகுதியில் (சிங்களப் பேரினவாத அரசுகள் சாராத) எந்த தமிழ்க்கட்சி வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றதோ அதற்கு வாக்கு அளிக்கும்படி கோருதல்.
3)சுயேட்சையாக நிற்பவர்தான் உங்கள் தொகுதியில் வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தால் அவர் எந்த சந்தர்ப்பத்திலும் சிங்களப் பேரினவாதத்திற்கோ, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கோ துணை போகமாட்டார் எனக்காணும்பட்சத்தில் அந்தச் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி கோருதல்.

இத்தகைய விடயங்களை புலம் பெயர் தேசத்தில் வாழும் எல்லோரும் தமது உறவினர்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய விடயங்களாக இருக்கின்றது. தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தமிழத்;தேசியத்தின்உரிமைகளுக்கு எதிராகச்செயற்பட்டவர்களுக்கு என்ன பதவிகளை சிங்களப்பேரினவாத அரசுகள் கொடுத்தது என்றும்எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ்மக்களால் தூக்கி எறியப்படுபவர்களுக்கு காலக்கிரமத்தில் சிங்களப் பேரினவாத அரசுகள் என்ன பதவிகளைக் கொடுக்கும்என்பதும் எமக்கு தெரியாத விடயம்அல்ல இருப்பினும் இவர்களை முற்றாகத்தமிழ் அரசியல்பரப்பில் இருந்து அந்நியப்படுத்துவதுதான் இவர்களுடைய அயோக்கியத்தனமான, அநாகரிகமான அரசியல் எம்முன்னே
வைத்திருக்கும் உடனடி அரசியல்க்கடமையாகும்.

தமிழமுதன்.