ஒவ்வொரு மரணமும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்: சாத்தான் குளம் சம்பவம் குறித்து ஐ.நா. கருத்து

225 0

ஒவ்வொரு மரணமும் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சாத்தான் குளம் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு காலத்தில் குறிப்பிட்ட நேரம் தாண்டி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறும்போது, “ஒவ்வொரு மரணமும் சட்டத்துக்கு உட்பட்டு முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து அடித்தனர். இதில் மூச்சித் திணறல் ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் உலகம் முழுவதும் போலீஸாரின் அராஜகத்துக்கு எதிராகவும், கறுப்பின மக்கள் மீதான் அடக்கு முறைக்கு எதிராகவும் வலிமையான குரல் கொடுக்கக் காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் சாத்தான் குளம் விவகாரம் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.