வடக்கு கிழக்கு மக்களிடம் தேர்தல் தொடர்பில் அக்கறையில்லை!-மஹிந்த தேசப்பிரிய

206 0

வடக்கு கிழக்கு மக்களிடம் தேர்தல் தொடர்பில் அக்கறையின்மை ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் இன்று ஊடக பிரதானிகளை சந்தித்த போதே அவர் இதனைக் கூறினார்.

தேர்தலின் முக்கியத்துவம் தொடர்பில் மக்களுக்கு ஊடகங்கள் தெளிவுப்படுத்த வேண்டும். இதேவேளை எதிர்வரும் தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும்.

கொரோனா அச்சம் நீங்கவில்லை என்பதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். தேர்தலை விட மக்களின் உயிரை எமக்கு மேலானது.

இதற்கு அமைவாகவே வாக்களிப்பு நிலையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை தேர்தல் பணிகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தப்போவதில்லை. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரே பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். பாதுகாப்பு தொடர்பில் யாரும் சந்கேமடைய தேவையில்லை.

இம்முறை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களில் அதிக தடவை செனிடைசர் பயன்படுத்த உள்ளமையால் இதற்கு மாத்திரம் மில்லியன் கணக்கில் செலவிட வேண்டியுள்ளது. வழமையாக நடைபெறும் தேர்தலை விட இம்முறை தேர்தல் முற்றிலும் வித்தியாசமானது.

அதாவது தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் சற்று வித்தியாசமாக காணப்படும். இதனால் இம்முறை தேர்தலுக்கு வழமையை விட அதிக நிதி செலவிட வேண்டி நிலை காணப்படுகின்றது.

சர்வதிகார நாடு என்றால் இவ்வாறான தேர்தல் செலவீனங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. அதுவே ஜனநாயக நாட்டில் தேர்தலை நடத்தும் போது தேர்தல் செலவீனங்களை தவிர்க்க முடியாது என மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.