வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு

310 0

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே அரச தலைவரால் தமிழர் பிரதிநித்துவம் இல்லாத தனிச்சிங்களவர்களை உள்ளடக்கிய தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர் தாயகத்தின் தனித்தவத்தை பாதுகாக்க வரலாற்று ரீதியாக மத> கலாசார> மொழி> பண்பாட்டு விடயங்களில் எமக்கு தாய்நாடாக இருக்கும் பாராத தேசம் தலையீடு செய்யவேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வன்னி தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேதானந்ததேரர் தெரிவித்து வருகின்ற கருத்துக்களானது இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதுவரைதமிழ் மக்களுக்கு எதிராக இனரீதியிலான ஆக்கிரமிப்புகளை செய்தவர்கள் தற்போது மதரீதியிலான ஆக்கிரமிப்பையும் செய்வதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தமிழர்களின் தாயகத்தில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரமடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இலங்கையின் மிகத்தொன்மையான பஞ்சஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்> சுந்தரமூர்த்திநாயனார் ஆகியோரினால் பதிகம் பாடப்பெற்ற புராதன சிவதலமாகும். இலங்கையில் பௌத்தமதம் வருவதற்கு முன்னரேயே இருந்த புனித சிவதலத்தை கோகண்ண விகாரை என்றும்> யாழ்ப்பாணத்தின் தொன்மையான நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்புமல்குமார என்ற சிங்கள இளவரசனால் கட்டப்பட்டதாகவும், அனுராதபுர ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரைக்கு மேலாகவே கோணேஸ்வரம் கட்டப்பட்டதாக வரலாற்றை திரிபுபடுத்தி கருத்துக்களை முன்வைக்கின்றார். இதுமிகவும் ஆபத்தானது. தேர்தல் நெருங்கும் காலத்தில் சிங்களபௌத்தர்களின் வாக்குகளை அதிகமாக பெற்றுக்கொள்வதற்கான உத்தியாக இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். அடுத்துவரும் நாட்களில் திருக்கேதீஸ்வரம்,மடுத்தேவாலயம் போன்றவற்றை பற்றியும் திடுக்கிடும் வரலாறுகளை முன்வைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறான வரலாற்றை திரிவுபடுத்தும் கருத்துக்கள் ஈழத்தமிழ் மக்களை மட்டுமல்ல பாரததேசத்தையும் குறிப்பாக எமது தொப்புள்கொடி உறவுகள் வாழும் தமிழ் நாட்டையும் சீண்டுவதாகஉள்ளது.

இவர்களுக்கு இவ்வாறான கருத்துக்களை வெளிவிடுவதற்கு அதிகாரத்தை கொடுத்தவர் தற்போதைய அரசதலைவரே. தீவிர பௌத்த சிங்கள தலைவராக தன்னைக்காட்டிக்கொள்ளும் கோதத்தபாய ராஜபக்கசவே கிழக்கு மாகாணத்திற்கென செயலணியை உருவாக்கினார். எல்லாவல மேதானந்த தேரரின் கருத்தானது அவரது தனிப்பட்ட கருத்தாக கொள்ளமுடியாது மாறாக இதுவே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இவ்வாறான நிலைமை தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் மாறிமாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாகவே நடாத்தியுள்ளார்கள்> ஏற்கனவே 30 வருட கொடிய யுத்தம் மக்களை பலவழிகளிலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் இவ்வாறான தொன்மையான மதம் சார்ந்த அடையாளங்களை தங்களுக்குரியதென உரிமை கோருவது பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பின் அதியுச்ச செயற்பாடாகும்> எனவே இந்த விடயங்களில் இந்திய அரசின் காத்திரமான பங்களிப்பு அவசியம் எனகருதுகின்றேன்.

அத்துடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதாரம் மிகவும் கீழ்நிலையில் உள்ளது. இவர்களுக்கான பொருளாதார வளர்ச்சி ஏற்பட தமிழ் நாட்டிற்கும் வடக்கு மாகாணத்திற்குமான நேரடி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்,

அண்மையில் பலாலிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.; மன்னாரில் இருந்து கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க சர்வதேசநாடுகளுடன் இணைந்து இந்திய hஅழுத்தம் கொடுக்க வேண்டும்;. ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகூடிய அதிகாரப்பகிர்வுடனான தீர்வை பெற்றுக்கொள்வதற்காகவே தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராடிவருகின்றார்கள். அவ்வாறான தொருநிலைமை ஏற்படும் பட்சத்தில் தமிழ் நாட்டில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எமதுமக்கள் மீண்டும் தாயம் திரும்பி நிம்மதியானதொரு வாழ்க்கையை வாழமுடியும். இவை அனைத்திற்கும் இந்திய அரசின் காத்திரமான பங்களிப்பு அவசியம். அத்துடன்; எதிர்காலத்தில் மன்னாரில் இருந்து தமிழ்நாட்டிற்கான கடல்வழி தரைத்தொடர்பையும் அமைப்பதன் மூலம் தமிழர் தாயகத்தை பௌத்த சிங்கள அக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க முடியுமென நம்புகின்றேன் என்றுதெரிவித்தார்.