இலங்கை ஜனாதிபதியாகும் கனவு எனக்கும் உள்ளது! -மங்களசமரவீர

254 0

இலங்கை ஜனாதிபதியாகும் கனவு எனக்கும் உள்ளது என முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஏனைய அனைவரையும் போல நானும் ஜனாதிபதியாக விரும்பினேன் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாவதற்கு மக்களின் வாக்குகளை பெறவேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற அரசியலில் இருந்தே தான் விடைபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் நாடு பல விடயங்களில் முன்னேறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் ஒவ்வொரு தலைவரும் நல்லநோக்கத்துடனேயே தெரிவுசெய்யப்படுகின்றனர் ஆனால் எவருக்கும் தன்னை சுற்றி அணிதிரள்பவர்களை எதிர்ப்பதற்கான துணிச்சல் இல்லை என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சிறந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே என தெரிவித்துள்ள அவர் சந்திரிகா குமாரதுங்கமாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால் அவரின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவும் நல்லநோக்கங்களுடனேயே தெரிவு செய்யப்பட்டார் ஆனால் யுத்தவெற்றிக்கு பின்னர் அவர் அதிகஅதிகாரங்களை விரும்புபவராக மாறினார் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஒரேகட்சியை சேர்ந்தவர்கள் மத்தியிலேயே மோதல் ஏற்படும் நிலை உருவானது என தெரிவித்துள்ளார்.

மேலும் விகிதாச்சார முறை காரணமாக வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவுகளுக்காக ஏனையவர்களை நம்பியிருக்கும் நிலையும் உருவானது என தெரிவித்துள்ள மங்களசமரவீர சட்;டவிரோத பணம் சம்பாதித்தவர்கள் அந்த பணத்தை பயன்படுத்தி எவரையாவது நாடாளுமன்றத்திற்குள் நுழைத்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதை தவிர்ப்பதற்காக அவர்கள் இவ்வாறு தங்களுக்கு ஆதரவானவர்களை நாடாளுமன்றத்திற்குள் நுழைத்தனர் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் மெல்ல திருடர்கள் சூதாட்டவியாபாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்கள் போன்றவர்களின் கூடாரமாக மாறிவருகின்றது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன மூன்றில் இரண்டை பெறாது அவ்வாறு அந்த கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் அது ஜனநாயகத்தின் முடிவாக அமையும் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.