யாழ் வாள்வெட்டுத் தாக்குதல் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

303 0

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்தோடு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கைலாயம் அல்லது ஜெகன் என்ற பிரதான சந்தேக நபரிடமிருந்து கைக்குண்டு, வாள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்ட நிலையில் தனியான வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கிலும் அவரை ஜூலை 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர் மீது நேற்று (08) காலை மாவட்ட செயலகம் முன்பாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த உத்தியோகத்தர் வழமை போன்று நேற்றைய தினம் காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் கையில் வாள் வெட்டு காயத்திற்கு இலக்கான உத்தியோகத்தர் பாதுகாப்பு தேடி மாவட்ட செயலகத்தினுள் ஓடியுள்ளார். அதன் போதும் , இருவர் அவரை பின் தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தினுள் புகுந்தும் தாக்குதலை மேற்கொண்டதுடன் , வெளியில் வந்து , வேறொருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு அதனை சேதமாக்கி விட்டு தப்பி சென்றனர்.

தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் மல்லாகத்தைச் சேர்ந்த 6 சந்தேக நபர்களை நேற்றிரவு கைது செய்தனர்.

அவர்களில் பிரதான சந்தேக நபரான மருதனார்மடம் ஜெகன் அல்லது கைலாயம் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்செயலுக்கு தயாராகும் வீடு முற்றுகையிடப்பட்டது.

நீர்வேலி கரந்தனில் உள்ள அந்த வீட்டின் வாழைத் தோட்டத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

“சந்தேக நபர்கள் 6 பேருக்கும் நேற்று காலை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு இருந்தது. அதனைச் சாட்டாக வைத்து காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்று மல்லாகம் நீதிமன்றுக்குச் சென்றுள்ளனர்” என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்தார்.

சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்தார்.

“உயிரை மதிக்காது வன்முறைகளில் ஈடுபட்டால் உள்ளேதான் தொடர்ந்து இருக்க வேண்டும்” என்று எச்சரித்த நீதிவான் சந்தேக நபர்கள் 6 பேரையும் வரும் ஜூலை 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.