ஜஹ்ரான் ஹாசிமிற்கு எதிராக தீவிரவாதத்தை பரப்புகின்றமை தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஒரு சாதாரண குற்றவாளி போல நடத்தப்பட்டார் என காத்தான்குடி பொலிஸ்நிலைய அதிகாரியொருவர்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் 2019 ஏப்பிரலில் ஜஹ்ரானும் அவரது சகாக்களும் மோட்டார் சைக்கிளில் குண்டை வெடிக்கவைத்தமை குறித்து அந்த அதிகாரி தகவல்களை வழங்கியுள்ளார்.
ஏப்பிரல் 17 ம் திகதி நபர் ஒருவர் தனக்கு சொந்தமான நிலமொன்றில் குண்டுவெடிப்பொன்று இடம்பெற்றது என முறைப்பாடு செய்தார் என காத்தான்குடி பொலிஸ்நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏப்பிரல் 19ம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன அன்றே நீதிமன்றத்திற்கு தகவல்களை வழங்கினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார்சைக்கிள் குறித்த விபரங்களை கண்டுபிடித்தோம், அந்த மோட்டார் சைக்கிள் களனியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது,அவர் அதனை மோட்டார் சைக்கிள் விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவருக்கு விற்பனை செய்திருந்தார் அந்த நபர் ஜெரால்ட் சில்வா என்ற அடையாள அட்டையை வைத்திருப்பவருக்கு அதனை விற்பனை செய்ததையும் கண்டுபிடித்தோம் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சில்வாவிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தனது அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தி ஜஹ்ரான் ஹாசிமின் குழுவை சேர்ந்தவர்கள் அந்த மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார் எனவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

