சிறீலங்கா மரைன் படையினருக்கு அமெரிக்க மரைன்கள் பயிற்சி!

301 0

us-marrineசிறீலங்கா கடற்படையினரால் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படையினருக்கு அமெரிக்க மரைன் படையினர் திருகோணமலைக் கடற்பரப்பில் பயிற்சியளிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சியானது இன்று தொடக்கம் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படையின், 11 ஆவது மரைன் நடவடிக்கை அணியுடன் திருகோணமலை துறைமுகத்துக்கு அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் சோமசெற் என்ற ஈரூடக போக்குவரத்துக் கப்பல் நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பலில் வருகை தந்துள்ள மரைன் கடற்படையினரும், சிறீலங்கா கடற்படை மாலுமிகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மரைன் படையினரும் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தப் பயிற்சியில், பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம், அடிப்படை தற்காப்பு தந்திரோபாயங்கள், போரில் உயிர் காப்புப் பயிற்சிகள், வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தல், விமானங்களுக்கு பயிற்றுவித்தல், சிறிய படகு மற்றும் தொடரணி நடவடிக்கைகள், தலைமைத்துவ பயிற்சி வகுப்புகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.