அரசியல் தீர்வுக்கு ஆணை பெற்ற கூட்டமைப்பினர் கம்பரெலியவைக் கூறி வாக்குக் கேட்கும் அவலம்- சுரேஷ் பிறேமசந்திரன்

236 0

அரசியல் தீர்வுக்கு ஆணை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கம்பரெலியவைக் கூறி வாக்குக் கேட்கும் அவலம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமாகிய சுரேஷ் பிறேமசந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று வடமராட்சி கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைத்தானத்தில் இன்று மாலை இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமாகிய சுரேஷ் பிறேமசந்திரன் தெரிவித்ததாவது,

கடந்த காலங்களில் யுத்தத்திற்கு பிற்பாடு நாங்கள் ஐக்கியப்பட்டு இயங்குவதனூடாகவே இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எமக்கு உரித்தான உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில் நீங்கள் நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக 16 பேரை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், தமிழ் மக்களிடமிருந்து பெற்ற ஆணை, தமிழ் மக்களுக்கு கொடுத்த உறுதி மொழிகள் என எதனையும் நடைமுறைப்படுத்தியதாக இல்லை.

இலங்கை அரசாங்கம் தான் விரும்பிய ஆணைக்குழுக்களை அமைத்து, இங்கு இருக்கக் கூடிய தொன்மையான புராதன இடங்களை பௌத்தத்திற்குரியது என்று உரிமை கொள்ளக்கூடிய கூழ்நிலை இன்று நிலவுகின்றது. இந்த நாட்டில் சிங்கள மொழி ஏறத்தாள 6ஆம் நூற்றாண்டளவில் தான் உருவாகத் தொடங்கியது. ஆனால் தமிழ் மொழி எப்போது தோன்றியதென்று யாருக்கும் தெரியாது.

இலங்கையில் வாழக்கூடிய தமிழ் தேசிய இனம் என்பது அழிந்து கொண்டிருக்கக் கூடிய தேசிய இனமாக இருக்கின்றது. அது திட்டமிட்ட வகையில் ஒரு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல்லாயிரக் கணக்கில் அந்த மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐ.நா சபையின் கணக்கில் படி யுத்தத்தினுடைய இறுதி நாட்களில் 70 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றார்கள்.

தமிழ் மக்களினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களின் எதிர்காலத்தை சரியான வகையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிலிருந்து வெகுதூரமாக விலகி இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பது மாத்திரம்தான் தனது முதன்மையான கடமை என நினைக்கின்றார்கள். தமிழ் மக்களுடைய நலன்கள் இரண்டாம் பட்சம்; என யோசிக்கிறார்கள்.

அரசியல் கைதிகளினுடைய விடுதலை, காணிகள் விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோருக்கான ஒரு தீர்வு இவை அனைத்தையும் அவர்கள் செய்திருக்க முடியும். ஏனென்றால் இந்த அரசாங்கத்தை பாதுகாத்து கொண்டிருந்தவர்கள் அவர்கள். ரணில் விக்கிரமசிங்க பதவி பறிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக்கப்பட்ட பொழுது அதனைத் தடுத்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கிய பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது. எனவே, இவர்களால் பதவி பறிபோன ஒருவரை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்த முடியுமாக இருக்கன்றது என்றால் ஏன் தமிழ் மக்களினுடைய சாதாரணமான பிரச்சினைகளைக் கூட தீர்க்க முடியவில்லை? தமிழர்களை கொலைசெய்து புதைத்ததனால் உயர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கிய ஒருவரை கோத்தாபாய ராஜபக்ஷவால் பொது மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட முடியுமாக இருந்தால் 15 வருட காலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது. அதற்கான ஒரு காத்திரமான பங்களிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் செய்யவில்லை.

இப்பொழுது சில கருத்துக்கள் கூறப்படுகின்றது சிலபேர் விடுவிப்பட்டார்கள் என்று. ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அல்ல. அவர்கள் பிணையில் வந்திருக்கின்றார்கள், இல்லையேல் குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் சுமந்திரன் போன்ற பொய் சொல்லக் கூடிய சட்டத்தரணிகள் தமது முயற்சியால் விடப்பட்டது போன்று தொடர்ச்சியாக இவ்வாறான பொய்களை பேசி வருகின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேல்தல் பிரசாரங்களில் பல புரட்டுக்கள் சொல்லப்படுகின்றன. வரலாற்றில் இல்லாத அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்லுகின்றார்கள். வீதிகள் போடப்பட்டிருக்கின்றன. உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆடு, மாடுகள் வழங்கப்பட்டிருக்கின்றது போன்ற விடயங்களையே தமது சாதனைகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றார்கள்.

கம்பரெலிய என்ற திட்டத்தின் கீழ் அரசாங்கம் கொடுத்த பணத்தில், வீதிகள், வாசிகசாலைகள், விளையாட்டுத்திடல்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டது. இது அரசாங்கம் முழு இலங்கைக்கும் ஒருக்கிய திட்டமாகும். ஆனால், இதை வைத்துத்தான் சிலர் இன்று வாக்குக்கேட்கின்றார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக சித்தார்த்தன் நான்கரை வருட பாராளுமன்ற காலத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே உரையாற்றியுள்ளார். தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளைத் தவிர தமிழ் மக்களுக்கான விடயங்கள் எதனையும் செய்யவே இல்லை.

இன்றைய சூழல் என்பது சர்வதேச ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வருகின்றது. இந்த சந்தர்ப்பங்களை தமிழ் மக்களினுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முரண்பாடுகள் அல்லது இலங்கை அரசாங்கத்தினுடைய சர்வதேச கொள்கைகள் அவை எவ்வளவு தூரம் ஏனைய நாடுகளை பாதிக்கின்றது என்ற விடயங்கள் போன்றவற்றை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான சர்வதேச விடயங்களை கையாளக்கூடியவர்களாகவும் அதில் புலமையும் அனுபவமும் இருக்கக்கூடியவர்களும் தான் பாராளுமன்றம் போக வேண்டும்.

எங்களுடைய கூட்டணி தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய, பொதுக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, அனைவரையும் உள்ளடக்கக் கூடிய கூட்டணியாக இது இருக்க வேண்டும் இயன்றவரை இவ்வாறான ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கின்றோம்.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் இக் கூட்டணி மேலும் விரிவுபடுத்தப்படும். எமது மக்களுடைய உரிமைகளை பெற்றுக் கொடுள்ள வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

எனவே, இனமோதல் தீர்வுக்கான புதிய சிந்தனை, புதிய அணுகுமுறை, புதிய தலைமை ஆகியவை தேவை. இதன்மூலமே கலாசாரத்தை வளர்க்க முடியும். மாற்றத்திற்கு வாக்களிப்போம். சிறந்த மாற்றத்தின் சின்னமான மீன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.