எதிரணி அரசியல்வாதிகளுக்கு எதிராக பழிவாங்கும் படலத்தை கட்டவிழ்த்துவிட்ட சிறிலங்கா அரசாங்கம் இன்று தேசிய விளையாட்டு வீரர்களையும் வேட்டையாட தொடங்கியுள்ளது. என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டி, குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
”இனவாதம் பேசி, மதவாதத்தை தூண்டி குறுக்குவழியிலாவது ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காக ஒருபுறத்தில் பாடுபடும் அரசாங்கம், மறுபுறத்தில் எதிர்காலத்தில் தமக்கு அச்சுறுத்தலாக மாறுவார்கள் எனக் கருதப்படும் நபர்களை வேட்டையாடிவருகின்றது. நாம் எதையும் செய்வோம். அதற்கு எதிராக வாய் திறந்தால் கழுத்துக்கு கத்திவரும் என்ற எச்சரிக்கையை விடுக்கும் வகையிலேயே ஆளுங்கட்சியின் அணுகுமுறைகள் அமைந்துள்ளன. சங்கா, மஹேல போன்றவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுகூட இதன்ஓர் அங்கமாகும்.
இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்ந்த சங்கக்கார, மஹேல ஜயவர்தன போன்றவர்கள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தம்மால் முடிந்த சமுகசேவைகளை செய்துவருகின்றனர். நாட்டுக்கு எதிரான திட்டங்களை விமர்சிக்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமைப்பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு தெரிவாவதற்கான அனைத்து தகுதிகளும் சங்கக்காரவுக்கு இருக்கின்றது. எனவே, சங்கக்காரவின் பெயரை எவரும் பரிந்துரைக்காமல் இருப்பதற்கான சூழ்ச்சித்திட்டமா இந்த விசாரணை என்ற சந்தேகமும் எமக்கு எழுகின்றது.
ஆட்டநிர்ணய சதி தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான தகவல்களை இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு விளையாட்டு சட்டத்தின் பிரகாரம், ஆட்டநிர்ணய சதி தொடர்பில் தவறான தகவலை வெளியிட்டால் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஆட்ட நிர்ணய சதி தொடர்பான தகவலை வெளியிட்ட அரசியல்வாதிக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்ன? ” – என்றார்.

