பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்- திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா

243 0

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற ஆனிவிஜயா கூறினார்.

திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பதவி வகித்த பாலகிருஷ்ணன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த டாக்டர் ஆனிவிஜயா திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. ஆனிவிஜயா நேற்று காலை திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.

அவருக்கு போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. ஆனிவிஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போதைய கொரோனா காலகட்டத்தில், போலீசார்-பொதுமக்களின் நல்லுறவு குறித்து தான் அதிக கவனம் செலுத்த உள்ளோம். இதனால் உட்கோட்ட அளவில் அனைத்து போலீசாருக்கும் பொதுமக்களை நட்புடன் கையாள்வது எப்படி? என்பது குறித்த மேலாண்மை பயிற்சி அளிக்க இருக்கிறோம். பொதுமக்களும் தயக்கமின்றி எந்நேரமும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து திருச்சி சரகத்தில் பணியாற்ற உள்ளேன்.

“காவல்துறை உங்கள் நண்பன்” என்பதற்கு ஏற்ற வகையில் தான் எங்களது நடவடிக்கை இருக்கும். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. போலீசார் தினமும் பல தரப்பட்ட மக்களுடன் பழகி வருகிறார்கள். இதனால், அவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.