இறுதியுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்தக்கோரிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றினால் ஒத்திவைப்பு

339 0

mullaitivu-courtsஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுமீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர்கள் சார்பாக எவரும் முன்னிலையாகாததை அடுத்து வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை நீதிபதி ஒத்திவைத்தார்.

முன்னைய வழக்கு விசாரணையின்போதுஇ 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்தனவினால் இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் தொடர்பான அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தினால் பல வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட ஒன்றெனவும் அந்த அறிக்கை 2009 ஆம் ஆண்டு மே மாதம் சரணடைந்தவர்களின் பட்டியல் அல்ல என்றும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

அத்துடன் தங்களிடம் வேறு சாட்சியங்கள் இல்லை எனவும் அதனால் வழக்கை நிறைவு செய்ய வேண்டும் என்றும் இராணுவம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனையடுத்து இந்த விடயத்தை எழுத்து மூலம் இன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

எனினும் மனுதாரர்கள் எவருமே இன்று ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட 11 பேரினால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.