நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம்- பண்ணையாளர்கள் கவலை

358 0

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் நாமக்கல் மண்டலத்தில் சுமார் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி சுமார் 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த முட்டைகள் கேரளாவுக்கு 1 கோடி, பிற மாநிலங்களுக்கு 50 லட்சம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இதர முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அனைத்து பகுதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த சில மாதங்களாக முட்டை விற்பனை கடும் சரிவை சந்தித்தது. இந்நிலையில் இந்த மாதம் தொடக்கம் முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. எனவே முட்டை விற்பனை சற்று உயர்ந்தது.

இதனால் முட்டையின் விலையும் அதிகபட்சமாக 4 ரூபாய் 60 காசுகள் வரை சென்றது. ஆனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் முட்டை விற்பனை மீண்டும் சரிவடைந்துள்ளது. இதனால் அதன் விலையும் நாளுக்குநாள் சரிவடைந்து வருகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு முட்டையின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 70 காசுகள் என நிர்ணயம் செய்தாலும், பண்ணையாளர்களுக்கு அந்த விலை கிடைப்பது இல்லை. இதனால் ஒரு முட்டைக்கு ரூ.1 வரை இழப்பு ஏற்பட்டு வருவதால், பண்ணையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி மற்றும் தாக்கம் காரணமாக கோழிப்பண்ணை தொழில் கடந்த 6 மாத காலமாக கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கியதும் பள்ளிகள் திறந்துவிடும். ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் சத்துணவுக்கு அனுப்பப்படும் முட்டைகள் தேங்கி வருகின்றன.

இதற்கிடையே சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் அங்கும் முட்டை விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் சுமார் 10 கோடி முட்டைகள் வரை தேக்கம் அடைந்துள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு முட்டையின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 70 காசு என நிர்ணயம் செய்து இருந்தாலும், பண்ணையாளர்களுக்கு 3 ரூபாய் 10 காசுகள் மட்டுமே கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.