கொரோனா தடுப்பு பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் மூன்றாம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை திட்டத்துக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் உக்கடம் பகுதியில் 39 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பேரூர் சாலையை ஒட்டியுள்ள பெரியகுளத்தில் புனரமைக்கப்பட்ட குளக்கரையின் ஒரு பகுதியையும், வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் மேம்பாடு செய்தல் பணி மூலம் 23 கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஒரு பகுதியையும் பொதுமக்கள் பயன்படுத்துக்கு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அதன் பின், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கொரோனா தடுப்பு பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது. மாநகராட்சி சார்பில் கோவையில் நாள்தோறும் 2ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடக்கிறது. தமிழகத்திலேயே அதிக நலத்திட்ட பணிகள் நடைபெறும் மாவட்டம் கோவை.
இவ்வாறு அவர் பேசினார்.

