ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு காரணத்தை விளக்கும் வஜிர அபேவர்தன

239 0

சிறிலங்காவில்  2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் ஒரு பிரிவினர் தன்னிச்சையாக செயற்பட்டமையே ஜனாதிபதி தேர்தலில் தோல்விக்கு காரணமாக அமைந்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியானது நாம் முறையாக பிரசாரப்பணிகளை முன்னெடுக்காமையினாலோ அல்லது ஒத்தழைப்பினை வழங்காமையினாலோ இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் 2016 ஆம் ஆண்டு நடத்தவேண்டிய ஜனாதிபதித் தேர்தலை 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்புவிடுத்தார். அதற்குக் காரணம் பொருளாதாரத்தைத் தொடர்ந்தும் கொண்டு நகர்த்த இயலாமையே ஆகும்.

அப்போது ஐக்கிய தேசியக் கட்சி சரியான தீர்மானத்தை எடுத்தது. அவ்வேளையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட வேண்டுமென்று ரணில் விக்ரமசிங்க கோரவில்லை. மாறாக நாட்டை நிர்வகிக்கக்கூடிய தரப்புக்கள் இணைந்து செயற்படத் தீர்மானித்ததோடு, அத்தரப்புக்களினால் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டார்.

அதில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் ஒன்றிணைந்து போராடி வெற்றியைப் பெற்றுக்கொண்டன.

இந்நிலையில் நாம் அடுத்ததாகத் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியிருந்தது கடந்த 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலாகும். இதன்போதும் 2015 தேர்தலில் தீர்மானம் மேற்கொண்டதைப் போன்றே, ஒன்றிணைந்து செயற்படக்கூடிய அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டையே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை முன்நிலைப்படுத்துவோர் கொண்டிருந்தார்களேயன்றி, மாறாக அக்கட்சியிலேயே ஒருவரை வேட்பாளராக்க வேண்டுமென்று கருதவில்லை.

அதனாலேயே ரணில் விக்கிரமசிங்க சுதந்திர சதுக்கத்தில் அனைத்துத் தரப்பினரையும் வரவழைத்து, அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான கூட்டத்தை நடத்தினார். ஆனால் அக்கூட்டத்தில் எமது தரப்பினரில் ஒரு பிரிவினர் தாமே ஜனாதிபதி வேட்பாளரெனப் பிரகடனம் செய்துவிட்டனர்.

எனவே 2019 ஜனாதிபதித் தேர்தல் தோல்வியானது நாம் முறையாக செயற்படாமையால் அல்லது பிரசாரங்களை மேற்கொள்ளாமையால் ஏற்படவில்லை. மாறாக நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டிய ஒரு போராட்டத்தைப் புறந்தள்ளி, தனியாக செயற்பட முற்பட்டமையினாலேயே அந்தத் தோல்வி ஏற்பட்டது” என கூறினார்.