சிறிலங்காவில் எந்தவொரு சட்டவிரோத அமைப்பிற்கும் துணைபோகும் விதமாக ஐ.தே.க. செயற்படவில்லை – அகிலவிராஜ்

273 0

சிறிலங்காவில் தமிழின துரோகி கருணா அம்மான் வெளியிட்டிருக்கும் கருத்து மிகவும் பாரதூரமானதாகும் என்றும் எந்தவொரு சட்டவிரோத அமைப்பிற்கும் துணைபோகும் விதமாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்படவில்லை என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறினார்.

2000 – 3000 எண்ணிக்கையிலான இராணுவத்தினரைக் கொன்றதாக கருணா அம்மான் வெளிப்படையாகவே கூறியுள்ள நிலையில் இதுகுறித்து முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கூறினார்.

அதுமாத்திரமன்றி மாறாக அவர் குறித்தவொரு கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அது இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் எம்மை ‘புலிகள்’ என்றார்கள். ஆனால் நாம் எந்தவொரு சட்டவிரோத அமைப்பிற்கும் துணைபோகும் விதமாக நாம் செயற்படவில்லை என்றும் நாட்டின் அனைத்து இன, மத மற்றும் மொழிக் குழுமங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் விதமாகவே செயற்பட்டோம் என்றும் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.

மேலும் தற்போது பாரிய வீழ்ச்சியினை எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீள நிமிர்த்தும் ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே சாத்தியமாக்க முடியும் என குறிப்பிட்ட அகிலவிராஜ் காரியவசம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பொதுத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தனித்து அரசாங்கம் அமைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்பார்ப்பாகும் என்றும் அரசாங்கம் அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றினையும் நோக்கம் எமக்கில்லை என்றும் குறிப்பிட்டார்.