ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால், வடக்கில் சிங்கள, முஸ்லிம் கட்சிகள் தமது வாக்கு வங்கியையும் மீறிய பலத்தைப் பெறுகின்றன. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,
எப்படியிருந்தாலும் முஸ்லிம், மற்றும் சிங்கள மக்கள் தத்தமது இனம் சார்ந்தே வாக்களிப்பார்கள். தமிழ் கட்சிகளுக்கு அவர்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் தமிழர்கள்தான் ஏதோ ஒரு வகையில், குறைந்த அளவிலாவது முஸ்லிம் மற்றும் சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர்.
குறிப்பாக வடக்கைப் பொறுத்த வரையில் சிங்கள மற்றும் தமிழ் கட்சிகளுக்கு மிகக் குறைந்த அளவிலான வாக்குகளே காணப்படுகின்றன. எனினும் தமிழ் மக்களில் ஒரு சிலர் இவ்வாறு சிங்கள, முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிப்பதனால், தங்களுடைய வாக்குவங்கிக்கு மீறிய ஒரு பலத்தினை அவர்கள் பெறுகின்றனர். ஒவ்வொருமுறையும் இவ்விடயம் இடம்பெறுகின்றது. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
எது எவ்வாறாயினும் தமிழர்கள் என்ற இன உணர்வுடன், மிக அதிகளவான எமது தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றமையினையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என்றார்.

