தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
தமிழகம் உள்பட சில மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று பிற்பகல் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தடுப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாரமும் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறேன்.
சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுப்பதற்கு 19-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர கால நடவடிக்கைகளுக்காக கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பது கொரோனா தடுப்புப் பணிக்கு சவாலாக உள்ளது. அதற்காக ஏற்கனவே கூறியது போல் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் அதே எண்ணிக்கையில் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு அளித்துள்ள வழிமுறைகளின்படி தமிழகத்தில் 3 லட்சத்து 85 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு 261 ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்கான பயண செலவு தொகை முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.
இந்தநிலையில், சில கோரிக்கைகளை உங்கள் முன்பு வைக்க விரும்புகிறேன். தமிழகத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு நான் ஏற்கனவே ரூ.3 ஆயிரம் கோடி அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். அந்த தொகையை எங்களுக்கு வழங்க வேண்டும். தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் வரும் 2-வது கட்ட நிதியை வழங்க வேண்டும். முதல் தவணை தொகையை பயன்படுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பித்திருக்கிறோம்.
மாநில பொருளாதார பாதிப்பை சரி செய்யும் வகையில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.9 ஆயிரம் கோடி தொகையை சிறப்பு மானியமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
கடந்த மார்ச் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை இப்போதே அளிக்க வேண்டும். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கமிஷன் பரிந்துரைத்த தொகையில் 50 சதவீத மானியத்தை இப்போதே அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்திற்கு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை அனுமதிக்க வேண்டும். தமிழகத்திற்கு உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக இலவசமாக வழங்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதலை மேம்படுத்தும் விதத்தில், பாக்கி இருக்கும் நெல் அரவை மானியம் ரூ.1,321 கோடியை உடனடியாக அளிக்க வேண்டும்.
மின்சார தேவைகளுக்கான நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும். பல்வேறு நிதி தேவைகளை எதிர்கொள்ளும் விதத்தில், நிதியுதவி கேட்டு நிதி முகமைகளை எனது அரசு அணுகியுள்ளது. அவற்றுக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழகத்தில் சிறு, குறு தொழில்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு ரூ.1,000 கோடியை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

