சிறிலங்கா அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை- சஜித்

249 0

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் நாட்டில் எரிபொருளின் விலையை குறைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்

கம்பஹாவில் இடம்பெற்ற பிரசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த நிகழ்வில் சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “இன்று எமது மக்கள் அனாதரவாக விடப்பட்டுள்ளார்கள். சக்தி மிக்க அரசாங்கம் ஒன்று இல்லை. திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் இல்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கிறது.

இந்த நிலையில், இந்த நாட்டை மீண்டும் முன்னோக்கி கொண்டுசெல்ல நாம் தலைமைத்துவம் வழங்கத் தயாராகவே உள்ளோம்.

இன்று உலக சந்தைகயில் எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதும், இலங்கை அரசாங்கம் எரிபொருளின் விலையை இன்னமும் குறைக்காமல் அப்படியே வைத்து வருகிறது.

ஒகஸ்ட் மாதம் எமக்கான அதிகாரத்தை மக்கள் வழங்கும்போது, முதல் வேலையாக எரிபொருளின் விலையை குறைப்போம் என நாம் இவ்வேளையில் உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.

அத்தோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளன. இந்த நிலைமை அனைத்தும் மாற்றியமைக்கப்பட வேண்டும். கொரோனாவினால், இன்று மக்கள் கைகளில் பணமில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலை மாற்றமடைய 6 மாதங்கள் கூட ஆகலாம். அதுவரை மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.