குடும்ப அரசியலில் சிக்கித் தவிக்கும் தெற்காசியா

82 0

ஔவையின் அறிவுறைகள் எக்காலத்துக்கும் பொருந்தும். அவரது நல்வழி நூலின் 22 ஆவது வெண்பா

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்

தெற்காசியா ஒரு வித்தியாசமான பிராந்தியம். எளிமையாக இப்பகுதியை இந்த நாடுகள் அனைத்திலும் அறியப்படும் கிச்சிடிக்கு ஒப்பிடலாம்.

உப்புமா அல்லது கிச்சிடி என்பதற்கு இதுதான் இலக்கணம் என்று எதுவும் இல்லை. எதுவும் எதனுடனும் எப்படியும் தேவைக்கேற்ப சேர்ந்து கொள்ளும். அதன் பொருள் கலவை என்பது.

எனினும் கிச்சிடிக்கும் குடும்ப அரசியல் போல ஒரு தனித்துவும் உண்டு. கொள்கைகள் ஏதும் இல்லாத கட்சிகள் எப்படி தேவைக்கேற்ப சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்குமோ அதுபோல்தான் கிச்சிடியும்.

அதை சாப்பிடுவதற்கு கால நேரம் எதுவும் கிடையாது. குடும்பக் கட்சிகள் எப்படி தமது தேவைக்கேற்ப கூட்டணி வைக்குமோ கிச்சடியும் அப்படித்தான்.

குடும்ப அரசியல் எனும் இந்தத் தொற்று நோயின் தோற்றுவாய் இந்தியா என்பது கசப்பான உண்மை.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜவஹர்லால் நேரு, தனது மகளான இந்திராவை படிப்படியாக அரசியலுக்குக் கொண்டுவந்து, தனது காலத்திலேயே அவருக்கு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்தார்.

முக்கியக் கூட்டங்கள், அரசியல் மேடைகள், வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றில் இந்திரா காந்தி தன்னுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார் நேரு. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் இந்திரா காந்தியை ஏற்கும் நிலை ஏற்பட்டது.

நேருவின் மரணத்துக்கு பிறகு சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பொறுப்பேற்ற லால்பகதூர் சாஸ்த்ரி இந்தியா பாகிஸ்தான் இடையே 1965 ஆம் ஆண்டு ஏற்பட்ட போரை முடிவுக்கு கொண்டுவர உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரில் அமைதி உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்ட மறுநாள் மர்மமான முறையில் அங்கேயே இறந்தார்.

அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தபோது இந்திராவை முன்நிறுத்தினார் காமராஜர். அதன் பிறகு அதே காமராஜருடன் முரண்பட்ட இந்திரா காந்தி கட்சி மற்றும் ஆட்சியை தனது பிடியில் வைத்து கோலோச்சினார்.

காங்கிரஸ் கட்சியில் துதிபாடியவர்களை அவர் ஊக்கப்படுத்தினார். அதன் மூலம் அவர்கள் ஊழலில் ஈடுபட்ட போது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தார் இந்திரா.

அதேவேளை தமது அரசியல் வாரிசுகளை உருவாக்க அவர் தவறவில்லை. தனது இளைய மகன் சஞ்சய் காந்தியையே அவர் தனது அரசியல் வாரிசாக எண்ணி வளர்த்தார். விமான விபத்து ஒன்றில் அவர் மரணமடைய இந்திய அரசியலில் எதிர்பாராத திருப்பம் ஒன்று உருவானது.

அரசியலில் ஆர்வமின்றிருந்த இருந்த அவரது சகோதரர் ராஜீவ் காந்தி சஞ்சய் வென்ற அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் கட்சியின் பொதுச் செயலர் ஆக்கப்பட்டார். இந்திரா காந்தி தமது பாதுகவலர்களால் சுட்டுக் கொல்லப்பட, அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது.

கட்சியில் மூத்தவர்கள் பலர் இருக்க, கட்சியின் ஒற்றுமை எனும் `பூச்சாண்டியைக்` காண்பித்து, நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி போன்றோர் ஒதுக்கப்பட்டு, மூப்பனாரின் முன்னெடுப்பில் ராஜீவ் பிரதமராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகளால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு பின்னர் அவரது மனைவி சோனியாவின் பிடியில் கட்சி சென்றது. தற்போது காங்கிரஸ் அவர்களது மகன் ராகுல் காந்தியிடம் உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் ஆரம்பித்த வாரிசு அரசியல் இதர கட்சிகளுக்கும் பரவியது. தென்னிந்தியாவில் இதை சீராக முன்னெடுத்தது காலஞ்சென்ற கலைஞர் கருணாநிதி என்ற விமர்சனமும் குற்றச்சாட்டும் இன்றளவும் உள்ளன.

திமுக ஆரம்பிக்கப்பட்ட போது ஐம்பெரும் தலைவர்கள் என்று கூறப்பட்டவர்களில் கருணாநிதி இல்லை. அண்ணாதுரை, நெடுஞ்செழியன், ஈவிகே சம்பத், என் வி நடராசன் மற்றும் மதியழகன் ஆகியோரே அந்த ஐவர்.

ஆனால் அண்ணாதுரை அவர்களின் மரணத்துக்கு பிறகு கட்சி மற்றும் ஆட்சியின் தலைமைக்கு வந்த அவர் தனக்கென்று ஒரு ஆளுமையை ஏற்படுத்திக் கொண்டு அரை நூற்றாண்டுகாலம் கோலோச்சினார்.

தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு பல சாதனைகளைப் புரிந்த அவர், தனது அரசியல் வாரிசுகளை வளர்த்தெடுக்கவும் தவறவில்லை. எனினும் மற்ற அரசியல் கட்சிகள் போன்று ஒரே இரவில் ஸ்டாலின் தலைவராகவில்லை. கட்சியில் படிப்படியாக உயர்ந்து இன்று தலைவராகியுள்ளார். அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சட்டமன்ற உறுப்பினராக இன்றளவும் உள்ளார்.

ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த மு க அழகிரி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் என்று மட்டுமல்லாமல், இதர உறுப்பினர்களின் வாரிசுகளே பொறுப்புக்கு வருவது மக்களிடையே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் கருணாநிதி குடும்ப அரசியல் செய்கிறார், மற்றவர்களை வளர அனுமதிப்பதில்லை என்று கூறி, வைகோ கட்சியிலிருந்து வெளியேறி மதிமுக என்ற கட்சியை தொடங்கினார்.

அதிமுகவிலும் குடும்ப அரசியல் உண்டு. பல அமைச்சர்களின் பிள்ளைகள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

வட இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் தனது மகன் அகிலேஷ் யாதவை கட்சியின் தலைவராகவும் மாநில முதல்வராகவும் ஆக்கினார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பதவி விலக வேண்டிய சூழல் வந்தவுடன் தனது மனைவி ராப்ரி தேவியை ஒரே இரவில் முதல்வராக்கினார். இன்று அவரது புதல்வர்கள் மாநில அரசில் துணை முதல்வர், அமைச்சரவையில் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளை மாறிமாறி அனுபவித்து வருகின்றனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்த நடிகர் என் டி ராமாராவ் தனக்கு பிறகு தனது மருமகன் சந்திரபாபு நாயிடுவை அரசியல் வாரிசாகக் கொண்டுவந்தார். அவர் இப்போது தனது மகனை வளர்த்து வருகிறார்.

ஒதிஷா மாநிலத்தில் காலஞ்சென்ற பிஜு பட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக் இப்போது மூன்றாவது முறையாக மாநில முதலமைச்சராக உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ஷேக் அப்துல்லா, அவரது மகன் ஃபரூக் அப்துல்லா, பேரன் ஒமர் அப்துல்லா ஆகியோரே மாநில அரசை தொடர்ந்து ஆண்டனர்.

அண்டை நாடான பாகிஸ்தானும் வங்கதேசமும் குடும்ப அரசியலுக்கு விதிவிலக்கு அல்ல. பாகிஸ்தானில் ஜுல்ஃபிகர் அலி புட்டோ தனது காலத்திலேயே மகள் பெனாசீர் புட்டோவை அரசியலுக்குக் கொண்டுவந்தார். அவர் தூக்கிலடப்பட்ட பிறகு கட்சி, ஆட்சி இரண்டின் தலைமைப் பொறுப்புக்கும் பெனாசீர் புட்டோ வந்தார். தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் அவர் கொல்லப்பட, அவரது கணவர் ஆசீஃப் அலி ஜர்தாரி ஆட்சியின் தலைமைப் பொறுப்புக்கும், மகன் பிலாவல் புட்டோ கட்சியின் தலைமைப் பொறுப்புக்கும் வந்தனர்.

வங்கதேசத்தைப் பொறுத்தவரை அந்த நாட்டின் தந்தை என்று அறியப்படும் முஜீபுர் ரஹ்மான் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவரது வாரிசு ஷேக் ஹசீனா கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். பின்னர் பிரதமராகவும் ஆனார்.

அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானுக்கு பிறகு பங்ளாதேஷ் தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவரது மனைவி பேகம் காலித ஜியா இரண்டு முறை நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தார்.

இலங்கையிலும் குடும்ப அரசியலுக்கு குறைவில்லை. நேரு காலத்துக்கு முன்பே டி எஸ் சேனநாயக்க, எஃப் ஆர் சேனநாயக்க ஆகியோர் தொடங்கிவைத்த குடும்ப அரசியல், வாரிசு அரசியலாக மாறி டட்லி சேனநாயக்க மறையும்வரை நீடித்தது. சமகாலத்தில் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க முன்னெடுத்த அரசியல் அவரது மனைவி சிறிமாவோ மூலம் குடும்ப அரசியலாகி, மகள் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகும் வரை நீடித்தது.

வடக்கே பொன்னம்பலங்கள், மலையகத்தின் தொண்டமான்கள்,தெற்கெ திஸநாயக்கள், ராஜபக் ஷகள், என்று பட்டியல் நீளும். முஸ்லிம்கள் தரப்பிலும் குடும்ப அரசியல் இருக்கவே செய்கிறது

சட்டவிரோதச் செயல்பாடுகள் மற்றும் ஊழல் மூலம் முறையற்ற வகையில் பணத்தைச் சம்பாதித்த அரசியல்வாதிகள், அதைப் பாதுகாக்க முன்னெடுக்கும் ஒரு வழிதான் வாரிசு அரசியல் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குடும்ப அரசியல் நிலவும் வரை, ஜனநாயகம் என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கும்.

காவியக் கவிஞர் வாலி படகோட்டி திரைப்படத்தில் எழுதிய ஒரு வரி நினைவுக்கு வருகிறது : “கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்–உழைத்தவர்கள் தெருவில் நின்றார்.

சிவா பரமேஸ்வரன் ( முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி)