கோவை மாவட்டத்தில் 400 பேரிடம் எடுக்கப்பட்ட சளி பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் கோவையில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை என்பது தெரியவந்ததாக சுகதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவல் நிலையை அடைந்து உள்ளதா? என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் நாடு முழுவதும் குறிப்பிட்ட மாவட்டங்களில் பொதுமக்களின் சளி, ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்ய முடிவு செய்யப் பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு 400 பேரிடம் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இதில் கோவையில் கடந்த மே மாதம் மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 400 பேரிடம் சளி, ரத்த மாதிரி எடுக்கப்ப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்தபோது சமூக பரவல் நிலையை அடைந்து உள்ளதா எனக்கண்டறிய மருத்துவ குழுவினர் 400 பேரிடம் பரிசோதனை செய்தனர். இதில் 10 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் கிருமியை எதிர்கொள்வதற்கான எதிர்ப்பாற்றல் (ஆன்டிபாடி) உருவாகி இருந்தது தெரியவந்தது.
மீதம் உள்ள 390 பேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தாலும் 14 நாட்களுக்கு பின்னர் அவர்களால் மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த பரிசோதனை முடிவுகள் மூலம் கோவையில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை அடையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

