ஜனநாயக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு

33 0

ஜனநாயக சோஷலிசக் குடியரசு என்ற நாட்டின் ஜனநாயகத் தன்மையைக் கொண்ட பெயருக்கும், அதன் ஜனநாயகப் பாரம்பரிய பெருமைக்கும் ஊறு விளைவிக்காத வகையில் ஆட்சியாளர்கள் செயற்படுகின்றார்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

நாடாளுமன்றக் கலைப்புக்கான வர்த்தமானி அறிவிப்பையும், ஜுன் 20 ஆம் திகதி தேர்தலுக்கான அறிவிப்பையும் அடிப்படை உரிமை மீறல் என்ற வகையில் சவாலுக்கு உட்படுத்திய மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஒரு சாராரும் இல்லை இல்லை இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த தோல்வி என்று ஒரு சாராரும் கூறுகின்றனர்.

ஆனால் நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை ஆகிய மூன்று துறைகளும் சமாந்தரமாக ஒன்றுக்கொன்று இணைந்து செயற்பட வேண்டும் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம். அடிப்படை விதி.

தேர்தலுக்கான ஒரு சூழலில் மூன்று மாதங்கள் சட்டவாக்கத்துறையாகிய நாடாளுமன்றம் செயலற்றிலுக்கலாம் என்பது அரசியலமைப்புச் சட்டம். ஆனால் தேர்தலை நடத்த முடியாத நிலையில் அந்த காலக்கெடு கடந்துவிட்டது. தேர்தலுக்கான திகதியைக் குறிக்க முடியாமல் தேர்தல் திணைக்களம் தடுமாறுகின்றது. இதனால் இன்னும் எத்தனை மாதங்களில் தேர்தல் நடக்கும் என்பது திட்டவட்டமாகத் தெரியாத நிலைமை உருவாகியிருக்கின்றது.

கலைக்கப்பட்ட நடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என்பது இப்போது உறுதியாகிவிட்டது. மூன்று துறைகளையும் கொண்டிருக்க வேண்டிய ஜனநாயகம் இப்போது நிறைவேற்றதிகாரம், நீதித்துறை ஆகிய இரண்டு கால்களில் மாத்திரமே உறுதியற்ற நிலையில் நின்று கொண்டிருக்கின்றது. இது ஜனநாயக வழித்தடத்தில் இருந்து விலகிய முக்கியமான நிலைமையாகும்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதா…..?

>மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற நாடாளுமன்றம் அதன் பதவிக்காலத்தில் நாலரை ஆண்டுகளைக் கடந்தவுடன் எந்த நேரத்திலும் அதனைக் கலைக்க முடியும் என்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அவ்வாறு கலைப்பதற்கு அவருக்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். தேசிய அளவில் வலுவான தேவையும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அத்தகைய பொதுத் தேவை எதுவும் இல்லாத ஒரு நிலையிலேயே மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பொதுத் தேர்தலுக்குத் திகதி குறிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்ற 3 மாதம் 13 நாட்களில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தைக் கலைத்தார். நடைமுறையில் இருந்த நாடாளுமன்றம் மார்ச் முதலாம் திகதியன்றுதான் நாலரை வருடங்களைக் கடந்திருந்தது. அதற்கடுத்த நாள் அது கலைக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெற்றிருந்ததையடுத்து, பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் அளித்திருந்த தீர்ப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது பதவியை சுயவிருப்பத்தின் பேரில் ராஜிநாமா செய்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை பலம் இருந்த போதிலும், அவர் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்திருந்தார். இது ஜனநாயகத்தின் மீது அவர் கொண்டிருந்த மரியாதையையும் மதிப்பையும் வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது என்றும் குறிப்பிடலாம்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் 69 லட்சம் வாக்குகளைப் பெற்று எதிர்பாராத வகையில் அமோகமாக வெற்றிபெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தனக்கு ஆதரவு வழங்கிய மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுவதற்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு முற்பட்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த ஆதரவு அலையின் வேகத்தில் பொதுத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற சுய கட்சி அரசியல் இலாப நோக்கமே இதற்கு முக்கிய காரணம் என எதிரணியினர் கூறுகின்றனர். பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற பொதுஜன பெரமுனவின் நோக்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலராலும் வெளியிடப்பட்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஜனநாயகம் என்பது மக்களுடைய நலன்களை அடிப்படையாகக் கொண்டது. மக்களால் மக்களுக்காக மக்களினால் என்ற நோக்கத்தைக் கொண்டது. மக்களை முதன்மைப்படுத்திய ஜனநாயகத்தின் காவலர்களாக இருக்கின்ற அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமானால் மக்களின் நலன்கள் அங்கு முதன்மை பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் பொதுஜன பெரமுன என்ற புதிய கூட்டு அரசியல் கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும். அதுவும் எதிர்த்து கேள்வி கேட்பதற்கு இடமில்லாத வகையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முற்படுவது ஒரு ஜனநாயக நடவடிக்கையாக இருக்க முடியாது.

பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வேண்டுமானால் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கைக் கொண்டு செயற்படலாம். தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடலாம். ஆனால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிட வேண்டும். காற்றுள்ளபோதே தூற்ற வேண்டும் என்பதைப் போல அதிகாரத்தில் உள்ளவர்களின் வெற்றிவாய்ப்புக்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பதவியில் உள்ள நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முயற்சி இங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது சரியான நடவடிக்கையாக இருக்குமா, ஜனநாயகமா என்ற கேள்வி எழுகின்றது

பெரும்பான்மையினருக்கே முதலிடம்

நாடாளுமன்றக் கலைப்பு ஒரு புறமிருக்க, இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இன மக்களின் அரசியல் உரிமைகள், அரசியல் நலன்களில் ஆட்சியாளர்கள் கொண்டிருக்கின்ற அணுகுமுறையும், அக்கறை சார்ந்த போக்குகளும் நாட்டின் ஜனநாயகம் குறித்த கேள்விகளை எழுப்பி இருக்கின்றன

பெரும்பான்மை பலத்தின் மூலம் தீர்வு காண்கின்ற போக்கையே ஜனநாயகம் கொண்டிருக்கின்றது. ஆனாலும் தேசிய சிறுபான்மை இன மக்கள், அரசியல் ரீதியாகப் பலமில்லாத சிறுபான்மையினருடைய நலன்களையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையாகும். பெரும்பான்மையோரின முடிவுகளே பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைந்தாலும், சிறுபான்மையினரின் கருத்துக்களும் அவர்களுடைய நியாயங்களும் தீர்மானங்களில் உள்ளடக்கப்பட வேண்டும். இதுவே உண்மையான ஜனநாயகமாகும்.

ஆனால் ராஜபக்ஷக்களைப் பொறுத்தமட்டில் இந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த மக்கள் அளித்த வாக்குகளின் பெரும்பான்மை பலத்தில் வெற்றிபெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களுடைய நலன்களுக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்ற போக்கைக் கடைப்பிடித்திருக்கின்றார். அந்த மக்களின் விருப்பங்களும் தேவைகளுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையே முதன்மைப்படுத்தி உள்ளார்.

ஜனாதிபதி பதவியென்பது கட்சி அரசியல் சார்ந்ததல்ல. கட்சி அரசியல் நலன்களுக்கானதுமல்ல. அது நாட்டு மக்கள் அனைவருக்குமே பொதுவானது. பிரதமருடைய பதவியும் அத்தகையதே. ஆனால் இந்த இரண்டு பதவிகளையும் தங்கள் வசப்படுத்தியுள்ள ஆட்சியாளர்கள் சிறுபான்மை தேசிய இன மக்களின் நலன்களைப் புறக்கணிப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்துவதைக் காண முடிகின்றது. இது ஜனநாயகமாகாது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ஒரே காரணத்திற்காக அந்தப் பதவிக்குரிய அதிகாரங்களை பேரின மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்துகின்ற போக்கை அவர் மிகவும் வெளிப்படையாகவே கடைப்பிடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயல்கள் என்பவற்றில் சம்பந்தப்பட்ட படையினரைத் தண்டிக்கப் போவதில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும், எவரும் அவர்களைத் தண்டிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதை அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இதனை தேர்தல் கால வாக்குறுதியாக முன்வைத்து வாக்குகளையும் பெற்றிருந்தார்.

பொதுமன்னிப்பும் ஜனநாயகமும்

குற்றம் இழைக்காதவர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்படக் கூடாது. ஆனால் குற்றவாளிகளுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்படுவதைத் தவிர்க்க முடியாது. தடுக்கவும் கூடாது. ஆனால் இராணுவத்தினர் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடவே இல்லை என்பதே ராஜபக்ஷக்களின் நிலைப்பாடு. அதனால்தான் இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்துவதை அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றார்கள். அந்த வகையில் பிடிவாதமாக செயற்படுகின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிருசுவில் படுகொலைச் சம்பவத்தில் கொடூரமாகக் 8 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற நாலரை மாதங்களில் இந்த மரண தண்டனைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. நீதிமன்ற விசாரணைகளில் அவர் குற்றவாளியாகக் காணப்படுகின்றார். அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டபோது மேன்முறையீட்டிலும் அந்தத் தண்டனை உறுதி செய்யப்படுகின்றது. குற்றவாளியாகக் காணப்பட்டவர் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது.

சாதாரண குற்றச்சாட்டின் கீழ் அவருக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. நான்கு பேர் ஆண்கள். மூன்று பேர் பதின்பராயத்தினர். அத்துடன் ஐந்து வயது சிறுவன் உட்பட எட:;டு பொதுமக்கள் இந்தச் சம்பவத்தில் சித்திரவதைக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இத்தகைய கொலைக்குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டவருக்கே ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது.

நாடு கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்தில் சிக்கித் தடுமாறிக்கொண்டிருந்த மார்ச் மாதப் பகுதியில் இந்தப் பொதுமன்னிப்பளிக்கும் சம்பவம் இடம்பெற்றிருந்தது. சிறைச்சாலைகளில் நெருக்கமாக இருந்த கைதிகள் மத்தியில் நோய்த்தாக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சிறைச்சாலை நடைமுறைகள் மறுசீரமைத்து இயலுமான கைதிகளை விடுதலை செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த தருணம் அது.

நீண்டகாலமாக நீதிவிசாரணைகளின்றி சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருந்த சூழலில் இவ்வாறு இராணுவத் தண்டனைக் கைதி ஒருவர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது. இது நீதித்துறைக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்பு. அதற்கும் அப்பால் நீதியை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக உரிமை மீறலாகவும் நோக்கப்படுகின்றது

புறக்கணிப்பு

மறுபுறத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் உரிமைகளுக்காக நடத்தி வருகின்ற போராட்டத்தை ஆட்சியாளர்கள் பயங்கரவாதமாகவும், நாட்டைத் துண்டாடுகின்ற கைங்கரியமாகவும் நோக்குகின்ற போக்கு நிலவுகின்றது. இது இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இன மக்களுடைய ஜனநாயக உரிமைகளைப் புறந்தள்ளுகின்ற ஒரு நடவடிக்கையாகும்.

சிறுபான்மையினரின் உரிமைகள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயகப் பண்பு இதனால் முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றது என்றே கூற வேண்டும். சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காகவே போராடுகின்றார்கள். அவர்கள் ஏனைய சமூக மக்களாகிய சிங்கள மக்களுடன் உரிமைசார்ந்த சக குடிமக்களாக சம அந்தஸ்துடைய குடிமக்களாக வாழ வழிசெய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கை.

அவர்களது நியாயமான கோரிக்கை தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு, அவர்களுடைய போராட்டங்கள் ஆயுதமுனையில் அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஆட்சியாளர்களே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டம் ஒன்றை மீண்டும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிலேயே தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற உண்மை அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

ஆனாலும் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்பெற்று வந்துவிடுவார்கள் என்ற பொய்ப்பிரசாரத்தை அவர்கள் தொடர்ந்து சிங்கள மக்கள் மத்தியில் செய்து வருகின்றார்கள். ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னரும் தீர்க்கப்படாமல் நீட்சி பெற்றிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையில் ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை தனிநாட்டுக்கான கோரிக்கையாகத் திரித்துப் பிரசாரம் செய்வதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள்

வரலாற்று ரீதியான வாழ்வுரிமையைக் கொண்டுள்ள தமிழ் மக்கள் வடக்கையும் கிழக்கையும் தமது தாயகப் பிரதேசமாகவும், தமது தனித்துவமான வாழ்விடமாகவும் உரிமை கோருவரைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தமிழ்த்தலைவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கின்றார்.

கீர்த்திக்குப் பாதகமானது

தமிழ் மக்களுடைய சிந்தனை வேறு. அவர்களின் அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர்களுடைய நிலைப்பாடு வேறு என்ற புதுக்கதையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள அவர், வடக்கு கிழக்குத் தாயகப் பிரதேச கோரிக்கையே தனிநாட்டு கோரிக்கைதான் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இந்தத் தாயகக் கோரிக்கையைக் கைவிட வேண்டும். அதன் அடிப்படையிலான சமஸ்டி வழியிலான அரசியல் தீர்வு என்பதையும் கைவிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கி அதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை எட்டிவிட வேண்டும் என்ற அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டுள்ள பொதுஜன பெரமுன என்ற அரசியல் சக்தியைக் கொண்டுள்ள ஜனாதிபதியும், பிரதமரும் ஜனநாயக வழித்தடத்தில் இருந்து பல்வேறு வழிகளில் விலகிச் சென்று கொண்டிருப்பதையே அவர்களுடைய செயற்பாடுகளும் அவர்கள் வெளியிடுகின்ற கருத்துக்களும் காட்டுகின்றன.

வர்களுடைய போக்கும், அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையிலான அவர்களுடைய நிலைப்பாடும் ஜனநாயகக் குடியரசு என்ற இந்த நாட்டின் நற்பெயருக்குப் பெருமை சேர்;க்க வழிசமைக்க மாட்டாது. தெற்காசியாவின் சிறப்பான ஜனநாயக நாடு என்ற கீர்த்திக்கு அது பாதகத்தையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

பி.மாணிக்கவாசகம்