பிரபல புல்லாங்குழல் வித்துவானும், வானொலி கலைஞருமான கமலா சதாசிவம் கனடாவில் காலமானார்

335 0

இலங்கையின் முன்னணிப் புல்லாங்குழல் வாத்திய இசைக் கலைஞரும், வானொலி, தொலைக்காட்சி கலைஞருமான செல்வி கமலா சதாசிவம் (கமலாதேவி சதாசிவம்) கனடாவின், ரொரன்ரோவில் தனது 74 ஆவது வயதில் கடந்த வாரம் காலமானார்.

1945 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், 19ஆம் திகதி இலங்கையில் பிறந்த கமலாதேவி சதாசிவம் காலம்சென்றவர்களான பொன்னம்பலம் சதாசிவம், திருமதி. பராசக்தி சதாசிவம் ஆகியோரின் புதல்வியும், சிவபரமானந்தன், ஞானதேவி, காலம்சென்ற பத்மநாதன், காலம்சென்ற சரோஜினிதேவி, மற்றும் மனோகரிதேவி, அருளநாதன் ஆகியோரின் சகோதரியுமாவார்.

கமலா சதாசிம் அவர்கள் 70-களிலும் 80-களிலும் கொழும்பில் பிரபலமான புல்லாங்குழல் வாத்திய இசைக்கலைஞராக விளங்கியவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கர்நாடக சங்கீத வாத்தியக் குழுவில் புல்லாங்குழல் இசைக்கலைஞராக இணைந்து கொண்ட செல்வி. கமலா சதாசிவம் பின்னர் தமிழ்ச் சேவையின் இசைப்பிரிவில் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

புல்லாங்குழல் வாத்தியத்தை இசைக்கும் கர்நாடக இசைக் கலைஞர்கள் மிக அரிதாக இருந்த அந்தக் காலத்தில், பெண் புல்லாங்குழல் இசைக்கலைஞராகத் தனித்துவத்துடன் விளங்கியவர் கமலா சதாசிவம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தெரிவு செய்யப்பட்ட புல்லாங்குழல் வாத்தியக் கலைஞராகப் பலவானொலி இசைக் கச்சேரிகளைக் சிரமமாகச் செய்து இசையுலகில் ஒருதனியிடத்தைப் பெற்ற கமலாசதாசிவம்,அக்காலத்தில் கொழும்பு இசைமேடைகளில் புல்லாங்குழல் இசைக்கச்சேரிகளைச் செய்துவந்தார். கொழம்பில் இடம்பெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் இவர் தவிர்க்க முடியாத ஒரு கலைஞராக விளங்கினார்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் தனது புல்லாங்குழல் இசைக்கச்சேரியை இசைத்தட்டாக வெளியிட்ட கமலா சதாசிவம்,ரூபவாஹினித் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பல இசை, நடனநிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இசைத்துறையில் இவரது திறமையைப் பாராட்டி வேணுகானவர்ஷினி என்று பட்டமளித்து கௌரவிக்கப்பட்டவர் கமலா சதாசிம். இவர் தனது இசைத் திறமையைப் பல பொதுச்சேவைகளுக்கு நிதி சேகரிப்பதற்காகப் பயன்படுத்தி உதவியிருக்கிறார்

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இயங்கும் அனாதை இல்லங்கள் மற்றும் அன்னை திரேசா தொண்டு நிறுவனம் முதலியவற்றுக்கு நிதி சேகரிப்பதற்காக புல்லாங்குழல் இசைக்கச்சேரி செய்து உதவிய கமலாசதாசிவம் அவர்கள், இசைச்சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். கொழும்பில் ஆரம்பக் கல்வியை சென்ற. கிளயர் மகளிர் கல்லூரியிலும் தொடர்ந்து இந்து மகளிர் கல்லூரியாகியசைவமங்கையர் கழகத்திலும் தனது பள்ளிப் படிப்பை மேற்கொண்ட கமலாசதாசிவம் அவர்கள்,மிகச் சிறுவயதிலேயே அப்போது சைவமங்கையர் கழகத்தில் இசையாசிரியராகப் பணியாற்றிய ஹரிகேஸநல்லூர் சிறீ. இராமசாமிஐயரிடம் புல்லாங்குழல் இசையைப் பயிலத் தொடங்கி அவரிடம் பிரத்தியேகமாகவும் படித்துத் தனது திறமையைவளர்த்து பதினாறாவது வயதில் முதல் மேடைக்கச்சேரி செய்து அனைவரது பாராட்டையும் பெற்றவர்.

தனது குடும்பத்தினர் மீது மிகுந்த பற்றுடைய கமலா சதாசிவம் அவர்கள், 1989ஆம் ஆண்டு கனடாவுக்குக் குடிபெயர்ந்தார். ரொரன்ரோவில் இசைக்கலைஞர்கள் மிகக் குறைவாக இருந்த காலத்தில் அனுபவம் வாய்ந்த முக்கிய மூத்த கலைஞராகப் பல கச்சேரிகள், அரங்கேற்றங்கள் என்று ஓய்வில்லாது இயங்கினார். அத்தோடு ரொரன்ரோவில் இளைஞர்களுக்குக் கர்நாடக இசையில் ஆர்வத்தையும் அறிவையும் ஏற்படுத்துவதற் கெனப் பல விரிவுரைகளையும் பயிற்சிகளையும் வழங்கினார். ரொரன்ரோ இளைஞர்களுக்குப் புல்லாங்குழல் வாத்திய இசையைப் பயிற்றுவிப்பதற்காக சொந்தமாக ஒரு இசைப்பள்ளியை நடத்தி வந்த கமலா சதாசிவம், இங்கு தொழில் பெற வேண்டி நிதித்துறையில் கல்விகற்று அத்துறையிலும் பணியாற்றினார்.

கர்நாடக இசைத்துறையில் ஒரு தனித்துவமான பெண் புல்லாங்குழல் வாத்திய இசைக் கலைஞராக இலங்கையிலும் கனடாவிலும் திகழ்ந்த கமலா சதாசிவம், அமெரிக்க, ஐரோப்பிய, ஆபிரிக்க மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றுக்குச் சென்று இசைப் பணியாற்றியிருக்கிறார். கமலா சதாசிவம் இசைத்துறையில் ஆற்றிய சாதனைகளும் சேவையும் போற்றுதற்குரியவை