கொரோனா நியூசிலாந்தின் அனுபவம்

323 0

நியூசிலாந்து கொரோனாத் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றது. தெளிவு, வேகம், வெளிப்படைத்தன்மை போன்றவைகளை உள்ளடக்கிய தேசபரிபாலனத்தின் அணுகுமுறையே அதற்கு முக்கிய காரணமாகும். ஐந்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தேசத்தில் லொக்டவுன் கட்டுப்பாடு ஏழுவாரம் நீடித்தது. அஃது உலகிலேயே கடுமையான லொக்டவுன் எனச் சொல்லப்படுகின்றது.

கொரோனாத் தொற்றை எதிர்கொள்வதில் தேசபரிபாலனத்தின் மாண்புகளை நியூசிலாந்து வெளிப்படுத்தியிருக்கின்றது. தெளிவான அரசியல் தலைமை, உறுதியான நிர்வாகக் கட்டமைப்பு, சமத்துவமான சுகாதாரச்சேவை, துறைசார்வல்லுனர் குழாம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த செயற்படு பாங்கு, அதனை மெருகேற்றியிருக்கின்றது. “சரியானதைச் செய்யவேண்டும். அஃது அறம் வழிப்பட்டதாக இருக்கவேண்டும்” என்னும் நியூசிலாந்தின் மாண்பு வெளிப்பட்டிருக்கின்றது.

“ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்” என்ற வகையில், தேசத்தின் அறம்சார்ந்த மாண்புக்கு இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் உயர்ந்து வையகம் செழிக்கும் என்னும் அசையாத நம்பிக்கையுடன் 1893ல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது தேசமாகும். “நெற்றிக் கண்ணைக்காட்டினும்”, அமெரிக்கா அணுவாயுதக் கப்பல் நியூசிலாந்துக் கடல் எல்லைக்குள் நுழைவதற்கான அனுமதியை 1985ல் மறுத்த தேசமாகும்

அரசின் இயல்பான தயார்நிலை, அனர்த்த முகாமைத்துவத்தின் இயங்குதன்மை என்பவை, கொரோனத் தொற்றுத் தொடர்பில் துரிதமான நடவடிக்கைகளுக்கு உதவின. சனவரி 12ல் கொரோனாத் தொற்றுக்குறித்து, முதலாவது எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. அப்போதே, தொற்று அபாயம் குறித்த தயார்ப்படுத்தல்களை நியூசிலாந்து ஆரம்பித்துவிட்டது. தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலைக்கு கொண்டுவரப்பட்டன.

பெப்ரவரி ஆரம்பத்திலேயே எல்லைகளை மூடுவதான சிந்தனை துளிர்த்துவிட்டது. நியூசிலாந்தின் பொருளாதாரத்தில் சீனா முக்கிய பங்காளியாகும். ஏற்றுமதியில் 20 விழுக்காடும், இறக்குமதியில் 15 விழுக்காடும் சீனாவுடனாகும். இருந்தபோதிலும், தொற்றைக் கட்டுப்படுதுவதற்காக சீனாவிலிருந்து வருபவர்களுக்கு, எல்லைகளை மூடுவதற்கு நியூசிலாந்து தயங்கவில்லை.

பெப்ரவரி 28ல் முதலாவது கொரோனாத் தொற்று ஈரானிலிருந்து வந்தவர் மூலமாக அடையாளமாகியது. அந்தவகையில் உலகிலேயே தொற்று ஏற்பட்ட நாடுகளின் வரிசையில் 48வது இடத்தை நியூசிலாந்து பெற்றுக்கொண்டது. மார்ச் 5ல் உள்ளூர் தொற்று ஏற்பட்டது. அதன்பின்னர் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது.

2019ல் நடைபெற்ற கிரைஸ்ட்சேர்ச் படுகொலை சம்பவத்தின் ஓராண்டுப் பூர்த்தி மார்ச் 14ல் அனுஷ்டிக்கப்பட ஏற்பாடாகியிருந்தது. அதன்போது மக்கள் கூடுகின்றமை, தொற்று அபாயத்தை அதிகரிக்கும் எனக் கருதப்பட்டது. அதனால் அந்த நிகழ்வை அரசு இரத்துச்செய்தது. மக்கள் திரளாகக் கூடுகின்ற நிகழ்வுகளைத் தவிர்க்குமாறு அரசு வினயமாகக் கேட்டுக்கொண்டது. அத்துடன் நின்றுவிடவில்லை. மார்ச் 16 முதல் 500க்கு மேற்பட்டவர்கள் கூடுகின்ற நிகழ்வுகளை அரசு கட்டுப்படுத்தியது. கட்டுப்பாடுகளை அறிவிப்பதோடு அரசு நின்றுவிடவில்லை. பிரதமர் முதலான அரசகட்டமைப்பில் உள்ளவர்களும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே செயற்பட்டனர்.

நியூசிலாந்துவாசிகளை விரைவாக நாடு திரும்புமாறு அரசு அறிவுறுத்தியது. மார்ச் 19ல் எல்லைகள் முற்றாக மூடப்பட்டன. அத்துடன் 100க்கு மேற்பட்டவர்கள் கூடுகின்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது.

மார்ச் 20ல் நிலைமைகள் மோசமடைய ஆரம்பித்தன. அன்றையதினம் ஒரு வெள்ளிகிழமை. தேசமே வாரஇறுதி மனநிலையில் காணப்பட்டது. ஆனால் அரசு துரிதமாகச் செயற்பட்டது. உள்ளூர் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நான்குபடிநிலை எச்சரிக்கைப் பொறிமுறையை அறிவித்தது

தொற்று அறிவுறுத்தல், தொற்று அபாயம், தொற்றுப் பரவல் மற்றும் தொற்று உக்கிரம் என்பதாக ஒன்று முதல் நான்கு வரையான எச்சரிக்கை படிநிலை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு படிநிலைகளிலும் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டது. அதனை மக்களுக்குத் துரிதமாகவும், தெளிவாகவும் சொல்லப்பட்டது.

முதலில் தொற்று அபாயம் குறித்து இரண்டாம் படிநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சமூகப்பரவல் சடுதியாக அதிகரித்தது. மார்ச் 23ல் தொற்றுப் பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அச்சமூட்டும் வகையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. அரசு விரைந்து செயற்பட்டது லொக்டவுனுக்கான 48மணி நேர முன்னறிவிப்பை வழங்கியது.

மார்ச் 25ல் அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டது. தொற்றின் உக்கிரத்தில் உச்சப்பட்சமான நான்காவது படிநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது அத்துடன் லொக்டவுன் ஆரம்பமாகியது. அதன்பிரகாரம் அத்தியாவசிய உணவு, பெட்ரோல்நிலையம், மருத்துவசேவை தவிர்ந்த அனைத்தும் மூடப்பட்டன. விளையாட்டு உள்ளிட்ட பொதுநிகழ்வுகள் நிறுத்தப்பட்டன. விளையாட்டு மைதானம், பூங்கா போன்ற பொதுப்பாவனை இடங்கள் மூடப்பட்டன. பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதேவேளையில் அரசின் செயற்பாடுகளை பரிசீலனை செய்வதற்கான ஏற்பாடுகளை சபாநாயகர் அறிவித்தார். அதன்படி, எதிர்க்கட்சித்தலைவரின் தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட தொற்றுக் கண்காணிப்புக்கான பாராளுமன்றக் குழு அறிவிக்கப்பட்டது.
மழைபெய்யும்போதே குடைதேவை. மழைநின்ற பின்னர் கிடைக்கின்ற குடை அர்த்தமற்றது. அந்தவகையிலே தேவையறிந்து அரசு செயற்பட்டது. லொக்டவுன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இடர்களை எதிர்கொள்வதற்கான நிவாரணத் திட்டங்களை துரிதமாக அறிவித்தது.

தொழில் நிறுவனங்களுக்கு உதவித் தொகை மற்றும் வரிநிவாரணம் அறிவிக்கப்படன. லொக்டவுன் காரணமாக வேலைக்குப் போகமுடியாதவர்களுக்குச் சம்பள உதவித்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி லொக்டவுனின் முதல்மாதத்துக்கு அடிப்படைச்சம்பளத்தில் எண்பது விழுக்காடு வழங்கப்படும் எனச் சொல்லப்பட்டது. அதன்பின்னரும் லொக்டவுன் தொடர்ந்தால், இரண்டாவது மாதத்துக்கு ஐம்பது விழுக்காட்டையும், மூன்றாவது மாதத்துக்கு முப்பது விழுக்காட்டையும் வழங்குவதான விபரத்தை லொக்டவுனின் ஆரம்பத்திலேயே அரசு தெளிவாகச் சொல்லியிருந்தது. பொருளாதாரப் படிநிலைகளில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான, சுகாதாரம் மற்றும் சமூகசேவைகளின் நிதி ஆதாரங்கள் வலுப்படுத்தப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்கள் மூடப்பட்ட நிலையில், கல்விச் செயற்பாடுகளை வீட்டிலிருந்து தொடர்வதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கான நிதி முதலீடுகள் அறிவிக்கப்பட்டன. அத்துடன் லொக்டவுனின் பின்னர் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களையும் அரசு தொடர்ச்சியாக அறிவித்தது.

ஏப்ரல் மாத ஆரம்பத்தில் நோய்த் தொற்று உக்கிரமாகியது. அன்றைய காலப்பகுதியில் சராசரியாக 90வரையான தொற்றுக்கள் தினசரி ஏற்பட்டன. அவசரகாலநிலையின் ஆயுள் ஒருவாரமே என்னும் விதி காணப்படுகின்றது. அதனால் மார்ச் 25ல் பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலை மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது.

நாடுதிரும்பும் நியூசிலாந்துவாசிகளுக்கு சுயதனிமைப்படுத்தலே கடைப்பிடிக்கப்பட்டது. ஏப்ரல் 10ல் இரண்டுவார கட்டாய தனிமைப்படுத்தலை அரசு அமுலாக்கியது. ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து தொற்று எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

ஆனாலும் அன்சாக் (ANZAC) நிகழ்வு இரத்துச்செய்யப்பட்டது. நியூசிலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படுகின்ற முக்கிய நிகழ்வு அன்சாக் தினமாகும். அன்றைய தினமான ஏப்ரல்25 அதிகாலைப்பொழுதில், ஒவ்வொருவரையும் வீட்டுவாசலிலே மெழுகுதிரி ஒளியேற்றி அஞ்சலி செய்யுமாறு கோரப்பட்டிருந்தது. போர்வீரரின் தியாகங்கள் மூலமாகப் பெறப்பட்ட சமாதானத்தின் அருமையை, லொக்டவுன் காலங்களில் பலரும் உணர்ந்ததாகவே தெரிகின்றது. அதனால் இந்த ஆண்டு அன்சாக் நினைவுதினம் மிதமிஞ்சிய உணர்வுகளைப் பரவலாக ஏற்படுத்தியது

தொற்று தொடர்ச்சியாக குறைந்தது. ஆனாலும் தொற்றுத் தொடர்பிலான முழுமையான ஆய்வைப் பூர்த்தி செய்து, தீர்மானத்தை மேற்கொள்வதற்கு காலஅவகாசம் தேவைப்பட்டது. அதனை அரசு வெளிப்படையாகச் சொல்லியது. அதனாலே லொக்டவுன் கட்டுப்பாடுகளை ஐந்தாவது வாரத்துக்கு நீட்டிப்பதாக அறிவித்தது. ஏப்ரல் 28ல் லொக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கோப்பிக்கடை, மக்டொனல்ட், ஹங்ரி ஜாக்ஸ் போன்ற உணவுவிற்பனைகள் ஆரம்பமாகின.

மே 13ல் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டன. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சமூக இடைவெளி பேணப்படவேண்டும் என்னும் நிபந்தனை நீட்டிக்கப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில், உணவகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆள்எண்ணிக்கை காரணமாக, உணவருந்தவந்த பிரதமருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மே 18ல் பாடசாலைகள் ஆரம்பமாகின. லொக்டவுன் தளர்த்தப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கூடியபோது, பொதுச் சுகாதாரக் கண்காணிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்வழியாக தனிமைப்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் வரையறுக்கபட்டது.

மே மாதத்தில் தொற்று எண்ணிக்கை ஒற்றை எண்ணுக்கு குறைந்தது. பொது இடங்களில் கூடுவோரின் எண்ணிக்கை 100 வரை அதிகரிக்கப்பட்டது. திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்டவை ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பின. வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன.

உலகத்தின் பால் உற்பத்தியில் இரண்டு விழுக்காடு பங்கை நியூசிலாந்து கொண்டிருக்கின்றது. அந்தவகையிலே தேசப் பொருளாதாரத்தில் மாடுகளின் பங்களிப்பு கணிசமானது. 2017ல் மைகோபிளஸ்மா போபிஸ் என்னும் தொற்றுநோய் மாடுகளுக்கு ஏற்பட்டது. அதன்போது அரசு துரிதமாகச் செயற்பட்டது. கணிசமான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை செயற்படுத்தியது. அதனூடாகத் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. நியூசிலாந்தில் மைகோபிளஸ்மா போபிஸ் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிடும் எனவும் கணிக்கப்படுகின்றது. அந்தவகையிலே பார்க்கும்போது, கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான அரசின் செயற்படு பாங்கு ஆச்சரியப்படத்தக்கதல்ல. இயல்பானதாகும்.

அரசின் தொற்றுக்கால நடவடிக்கை குறித்த கருத்துக் கணிப்புக்கள், 60 விழுக்காடு மக்கள் மிகுந்த திருப்தி கொண்டுள்ளதாகவே சொல்கின்றன. கடுமையான லொக்டவுன் குறித்த அரசின் தீர்மானத்தை 90 விழுக்காடு மக்கள் சரியானது எனச் சொல்லியுள்ளனர்.

அரசின் செயற்பாடுகள் மக்களைச் சென்றடைகின்றன. அதற்கு தகவல் பரிமாற்றத்தில் காணப்படுகின்ற தெளிவும், வேகமும் முக்கிய பங்காற்றுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் அரசின் செயற்பாடுகள் மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்லப்படுகின்றன. அவசரகாலநிலை, லொக்டவுன் கட்டுப்பாடு ஆரம்பம் மற்றும் முடிவு உள்ளிட்ட மைல்கல் நிகழ்வுகட்கு போதிய முன் அறிவிப்பு வழங்கப்படுகின்றன. அரசின் செயற்பாட்டில் தவறு ஏற்படும்போது சுட்டிகாட்டப்படுகின்றன. அரசும் அதனை ஏற்றுக்கொள்கின்றது. தவறுகளைச் சீர்செய்கின்றது.

எதைச் செய்யவேண்டும். எதைச் செய்யக் கூடாது. என்பதை கட்டளையிடுகின்ற பாணியில் அரசு சொல்லவில்லை. மாறாக தொற்றுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என மக்களை அரசு திரளாக்கியது. ஐந்து மில்லியன் டீம் (குழு) என்பதைப் பிரதமர் ஜசிந்தா ஆர்டன் மந்திரச் சொல்லாக்கினார். தொற்று அதிகரித்தவேளையில், நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம் என நம்பிக்கை ஏற்படுத்தினார். தொற்றுக் குறையும்போது, ஐந்து மில்லியன் டீமின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

பல்வேறு நிலைகளிலுள்ள மக்கள் குழுவுடன் உரையாடும்போது, வளரிளம் பருவத்தினருடன் பயன்படுத்துகின்ற எளிமையான சொல்லாடல்களே, தொடர்பாடலைக் கூர்மைப்படுத்தும் என்பது வல்லுனர்களின் கருத்தாகும். அதனைப் பிரதமரின் தொடர்பாடல்களிலே அதிகம் காணமுடிந்தது. தொற்று பலருக்கும் அச்சமூட்டும் காலமாகக் காணப்பட்டது. அதனால் கனிவோடு நடந்து கொள்ளவேண்டுமென்பதை (Be Kind) அடிக்கடி நினைவுபடுத்தினார். வீட்டிலேயே இருங்கள் என்பதை “தொற்று ஏற்பட்டால் எப்படி நடந்துகொள்வீர்களோ” அப்படி இருக்கச் சொன்னார். பிரதமர் ஜசிந்தா ஆர்டனின் தினசரி மதியம் ஒருமணித் தேசியத் தொலைகாட்சிப் பத்திரிகையாளர் சந்திப்பு பெரிதும் கவனிக்கப்பட்டன. பிரதமரின் உன்னதமான தலைமை நியூசிலாந்துக்கு வெளியேயும் கவனத்தை ஈர்த்தது என்றால் மிகையில்லை.

சுருங்கச் சொல்வதானால், கொரோனாத் தொற்று புதிது. ஆனால் தேசபரிபாலனம் புதிதல்ல. 2011ல் கிரைஸ்ட்சேர்ச் நிலநடுக்கம், 2019ல் கிரைஸ்ட்சேர்ச் தாக்குதல் என்றவகையில் 2020ல் கொரோனத் தொற்றை எதிர்கொள்வதில் தேசபரிபாலனத்தின் மாண்பையே நியூசிலாந்து வெளிப்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து சிற்சபேசன்