விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை சிறிலங்கா ஸ்தாபிக்க முடிவு

389 0

சிறிலங்காவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளது.

இதன்போது, பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

இதனடிப்படையில், சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய விமான நிலையத்தில் தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஐந்து பரிந்துரைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ளது.

கடற்படையினர் மற்றும் வெளிநாட்டவர்களிடமிருந்து வைரஸ் சமூகத்திற்குள் பரவுவதை தடுப்பதற்காக தெளிவான திறமையான திட்டங்கள் அவசியம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்படுபவர்கள் இலங்கைக்குள் வந்தவுடன் கொரோனா வைரஸ் சோதனையை மேற்கொள்ளுங்கள் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையிலேயே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.