2 மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவில் பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை

326 0

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று 505 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 2 மாதங்களில் பதிவான மிகக்குறைவான பலி எண்ணிக்கை ஆகும்.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 55 லட்சத்து 87 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 28 லட்சத்து 73 ஆயிரத்து 655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 167 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பரவியவர்களில் 23 லட்சத்து 65 ஆயிரத்து 645 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரத்து 861 பலியாகியுள்ளனர்.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவை புரட்டி எடுத்து வந்தது. வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், 2 மாதங்களுக்கு பின்னர் தற்போது அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
கோப்பு படம்
தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 17 லட்சத்து 6 ஆயிரத்து 226 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 99 ஆயிரத்து 805 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நேற்று (மே 25) மட்டும் 505 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக அங்கு வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 29 ஆம் தேதி அமெரிக்காவில் கொரோனாவுக்கு 497 பேர் பலியாகினர். அதன் பின்னர் அங்கு வைரசுக்கு தினமும் பலியாவோர் எண்ணிக்கை ஆயிரம் முதல் 2 ஆயிரம் என்ற கணக்கில் இருந்தது.
ஆனால், நேற்று (மே 25) அமெரிக்காவில் கொரோனாவுக்கு 505 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த இரண்டு மாதங்களில் பதிவான ஒரு நாள் கணக்கின் மிகக்குறைவான பலி எண்ணிக்கையாகும்.
இந்த விவரங்களின் மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரசின் வீரியம் படிப்படியாக குறைந்து வருகிறது என்ற தகவல் வெளியாகி வருகிறது.