தமிழர்கள் ஏன் பிரிந்து செல்ல விரும்பினர்?

46 0

இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள பௌத்தர்கள் அங்குள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களிடம் அரக்கத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்` ;—முள்ளிவாய்க்கால் நினைவு உரை 2020 இல்—ஹோஸே மனுவேல் ராமோஸ் ஹோர்டா—1996 ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசு பெற்றவர்.

கால்பந்து உட்பட கோல்கள் அடித்து விளையாடும் ஆட்டங்கள் தொடர்பில் ஒரு சொலவடை உண்டு ;நமக்கு ஒத்துவரவில்லை என்றால் கோல் போஸ்ட்டுகளை தள்ளிவை என்பதாகும். அதாவது தமது தேவைக்கேற்ற வகையில் அளவுகோலை மாற்றிக் கொள்வது.

அடுத்தவர்கள் எதையாவது முறையாகச் செய்ய முன்வந்தால், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர்கள் செய்ய நினைப்பதை மேலும் கடுமையாக்கும் முயற்சியையே `கோல்போஸ்ட்டுக்ளை நகர்த்துதல்-Moving the goalposts- என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அகராதி விளக்குகிறது.

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கையில் நடைபெற்ற இரு தனித்தனி நிகழ்வுகளில், `கோல்போஸ்ட்டுகளை தள்ளி வைக்கும் நடவடிக்கை` இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் கொடூரமாக முடிவடைந்த உள்நாட்டுப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலியும் மரியாதையும் செய்யும் நிகழ்வுகள் நாட்டின் வடகிழக்கு மற்றும் கொழும்பில் இடம்பெற்றன.

இராணுவத்தினர் விதித்திருந்த தடைகளை மீறி, போரின் போது உயிரிழந்த உறவுகளுக்கு தமிழர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வின் போது சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டதைப் புகைப்படங்களும் கானொளியும் காட்டின. கொரோனா நோய்த் தொற்று காரணமாக மக்கள் நடமாட்டத்தை முற்றாக தவிர்க்க வேண்டும் என்று இராணுவம் கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தது.

இவ்வளவுக்கும் வட மாகாணத்தில் பகல் நேர ஊரடங்கு இப்போது நடைமுறையில் இல்லை.
அதேவேளை, ஊரடங்கு அமலில் இருக்கும் கொழும்பு மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில், இலங்கை அரசின் சார்பில் போர் வெற்றியைக் குறிக்கும் வகையிலான `தேசிய போர் வெற்றி தினம்` அனுசரிக்கப்பட்டது.

அந்த நிகழ்வும் எளிமையான வகையில் நடைபெற்றாலும், ஜனாதிபதி, பிரதமர், முப்படைத் தளபதிகள், காவல்துறைத் தலைவர், உயரதிகாரிகள் மற்றும் போரில் குடும்பத்தாரை இழந்த சிங்கள மக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் முதல் குடிமகன், இந்த நிகழ்வில் முகமூடி அணியாமல் உட்கார்ந்திருந்ததை அரச தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் காண முடிந்தது. அந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் திணைக்களம் சமூக விலகல் தொடர்பில் விடுத்திருந்த அறிவுரை-முழுமையாக பின்பற்றதா என்ற கேள்விக்குப் பதிலில்லை.

கடந்த 2015 தொடங்கி 2019 வரையிலான காலப்பகுதியில் `தேசிய நல்லாட்சி அரசின்` ஆட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலிக்குத் தடைகள் ஏதும் இருக்கவில்லை. மாறாக விடுதலைப் புலிகள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால், அந்த நிகழ்வின் அவர்களைப் போற்றுவது அனுமதிக்கப்படாது எனும் அறிவுறுத்தலே விடுக்கப்பட்டிருந்தது.

வடமாகாணத்தில் நீத்தார் நினைவு நாளை அனுசரிக்கும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களும் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்ட செய்தியாளர்கள் குழுவொன்று பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு, பகல் 11 மணியளவிலேயே முல்லைத்தீவு சென்றடைந்துள்ளனர்.

`அஞ்சலி நேரமான காலை 10.30 மணிக்கு நாங்கள் அங்கு செல்லக் கூடாது, செய்திகளைச் சேகரிக்கக் கூடாது என்பதில் அரசு குறியாக இருந்தது“ என்று அங்கு சென்றுவந்த செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

வடக்கு கிழக்கில் நடைபெறும் அஞ்சலி நிகழ்வுகள் வெளியுலகுக்கு தெரியக் கூடாது என்று அரசு கருதுகிறது என்கிறார் அந்தச் செய்தியாளர்.

ஆனால் கொழும்பில் நடைபெற்ற தேசிய போர் வெற்றி தின நிகழ்வுகள் அரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அனைத்து தொலைக்காட்சிகளும் தமது மாலை நேரச் செய்திகளில் இந்த நிகழ்வுக்குப் பிரதான இடம் கொடுத்தன.

மாறாக 19 ஆம் திகதி இலங்கையில் வெளியான ஆங்கில மற்றும் சிங்கள பத்திரிகைகள், ஊடகங்கள் ஆகியவற்றில் `ஒன்றிணைந்த இலங்கையின்` வடபகுதியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண்பதே அரிதாக இருந்தது ;ஒன்றிரண்டு பத்திரிகைகள் ஏதோ பக்கத்தை நிரப்ப இது குறித்தும் இரண்டு வரிகளை எழுதி வைப்போமே என்பது போலத்தான் செய்தியை வெளியிட்டிருந்தன.

ஏனிந்தப் பாகுபாடு? ஊடகங்கள் செய்தியை, செய்தியாகத்தானே பார்க்க வேண்டும், காழ்ப்புணர்ச்சியும் பக்கச்சார்பும் இன்றி செய்திகளை வெளியிட வேண்டும் என்ற அடிப்படை ஊடக தர்மம் இலங்கையில் இல்லை என்பது, உலக ஊடக அளவுகோலில்-World Press Freedom index- இலங்கை மிகவும் கீழுள்ளதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் மத உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உள்ளது. அந்த மத உரிமையில் வழிபாடு என்பது மிகவும் முக்கியமானது. நீத்தார் நினைவு போற்றுதலும் ஒருவகையான வழிபாடு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அவ்வகையில், போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுப்பது அல்லது இடையூறு ஏற்படுத்துவது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகவே கருதப்படும்.

இறுதிக்கட்ட போரின் போது எத்தரப்பையும் சேராத பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தடுக்க அரசு முயல்வதை எவ்வகையில் நியாயப்படுத்த முடியும்?

போரில் வெற்றி கொண்ட அரசு, பெருந்தன்மையுடன் அந்த சிறிய அஞ்சலி நிகழ்வுக்குத் தடை ஏதும் செய்யாமல் இருந்திருந்தால், ஆட்சியாளர்கள் மீதான நன்மதிப்பு அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வலிந்து அதைத் தடுக்கும் நோக்கில் ஈடுபடும் போது மறைமுகமாக அது கூடுதலான விளம்பரத்தைப் பெறுகிறது என்பதை ஏன் அரசு அறிந்திருக்கவில்லை?

தேசிய போர் வெற்றி விழாவையொட்டி எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் இராணுவத்தைச் சேர்ந்த 14,617 பேருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய இராணுவங்களைக் கொண்டுள்ள சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் கூட இப்படியாக ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் இல்லை.<

இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. முதலாவதாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பதவி உயர்வுகளை அளிக்க முடியுமா.? முடியுமென்றால், 50,000 பயிற்சி பட்டதாரிகளின் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எப்படி! அதேபோல பயிற்சி அபிவிருத்தி உதவியாளர்கள் என்று 7000 பேர் கிராம மட்டத்தில் நியமிக்கபட்டதும் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு பதிலென்ன?

இலங்கைப் படைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் அமைப்புகளிலிருந்து இருந்து தமது நாடு வெளியேறும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ போர் வெற்றி விழாவில் பங்கேற்றபோது தெரிவித்தார்.

அது யதார்த்த நிலையில் சாத்தியமா?

விமர்சனம் செய்வோர்களை ஒதுக்கி வைப்போம் என்றால், தனிமைப்படுத்தலே மிஞ்சும் என்பதை ஆட்சியாளர்கள் எண்ண வேண்டும்.

பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமான `வெசாக் பண்டிகையை` இம்முறை வீட்டிலேயே கொண்டாடுங்கள் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான தமிழ் வருடப் பிறப்பு, கிறித்துவர்களின் புனித வெள்ளி பிரார்த்தனை, இஸ்லாமியர்களின் ஈகைப் பெருநாள் தொழுகை போன்றவை கொரோனா அச்சம் காரணமாக இம்முறை ஆலயங்கள், விகாரைகள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் ஒன்றுகூடல் மூலம் அனுசரிக்க முடியாத நிலையில், கொழும்பில் ஊரடங்கு இருந்தும் தேசியப் போர் வெற்றி நிகழ்வு (எளிமையாக) நடைபெற்றுள்ளது.

போர் வெற்றியையும் வீட்டிலிருந்தே அனுசரித்திருக்கலாம். ஜனாதிபதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருக்கலாம், அதேபோன்று, முள்ளிவாய்க்கல் நிகழ்வை சுய அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்துவதைத் தமிழ் அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும்.

கடந்த வாரத்தில் வடக்கிலும் தெற்கிலும் நடைபெற்ற நிகழ்வுகளை பார்க்கும்போது கோல்போஸ்ட்டுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது.

நிறைவாக, முள்ளிவாய்க்கால் நினைவு நாளையொட்டி, சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவரும், கிழக்கு திமோர் நாட்டின் முன்னாள் அதிபருமான ஹோஸே மனுவேல் ராமோஸ் ஹோர்டா ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் கிழக்கு திமோர் இந்தோனீசியாவிலிருந்து பிரிந்து விடுதலையடைவதற்கான போராட்டங்கள் குறித்து விளக்கியுள்ளார். 24 ஆண்டுகள் நடைபெற்ற போரில் தமது தரப்பில் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாங்கள் நடைபெற்றவற்றை மறக்கவில்லை ஆனால், கடந்தகாலங்களில் நடைபெற்ற நிகழ்வுகள், துன்பங்கள், துயரங்கள் வன்முறைகள் ஆகியவை எம்மை பணயக் கைதிகளாக வைத்திருக்க நாங்கள் அனுமதிக்கவில்லை“

பௌத்தர்கள் கருணையை வெளிப்படுத்தி அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும். அதேவேளைத் தமிழர்கள் ஏன் பிரிந்து செல்ல விரும்பினர் என்பதை கொழும்பிலுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசும், தமிழர் தரப்பும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். நம்பிக்கையையும் கருணையையும் கைவிடக் கூடாது என்று வேண்டியுள்ளார் ஹோஸே ராமோஸ்

சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியளர் பிபிசி