சிங்கள பௌத்த நாடாக மாற்ற கிழக்கில் தொல்லியல் என்ற போர்வையில் ஜனாதிபதி விசேட செயலணி – தர்மலிங்கம் சுரேஷ்

346 0

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகரித்து இந்த இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

அவர் மட்டக்களப்பிலுள்ள அவரது வீட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலே ஒரு துரித காணி அபகரிப்பை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி பௌத்த ஆலோசனை சபையை சந்தித்து அந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கமால்குணரட்ன தலைமையில் விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

புனித பூமி என்ற ரீதியில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காக பௌத்த மத சின்னங்கள் கொண்டு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அம்பாரையில் 247 இடங்களும், திருகோணமலையில் 74 இடங்களும், மட்டக்களப்பில் 28 விகாரைகள் உட்பட 55 இடங்கள் பௌத்த மதத்துடன் தொடர்புடைய தொல்லியல் இடங்களாக அடையாளப் படுத்தியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அண்மை காலங்களில் பல்லாயிரக்கணக்கான காணி அபகிக்கப்பட்டள்ளது. குறிப்பாக அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் அதிகயளவு காணி அபகரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த இடங்களை அபகரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் காணிகளை முற்று முழுதாக அபகித்து இந்த இலங்கை தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு இந்த செயற்பாடு ஜனாதிபதியினுடைய தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

எனவே இந்த ஆட்சி என்பது இனவாத ஆட்சியாகவே நாம் பார்க்கின்றோம் கடந்த காலத்தில் முள்ளிவாய்கால் பேரவலத்தை ஏற்படுத்த முன்னின்று வழிநடாத்தியவர் தற்போது நாட்டின் ஜனாதிபதி.

இந்த தமிழ் தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பித்தான் எங்களுடைய மக்கள் வாக்களித்திருந்தனர்.

இவர்கள் தமிழ் மக்களின் காணிகளை பாதுகாப்பார்கள் தமிழினத்துக்கோர் விமேசனத்தை தேடித்தருவார்கள் என கடந்த 10 வருடங்களாக அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தனர். ஆனால் திட்டமிட்ட முறையில் அவர்களின் அனுசரணையுடன் இவ்வாறான செயற்பாடுகள் நடந்தேறியுள்ளன.

முள்ளிவாய்காலுக்கு பின் கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கில் இந்த பேர்வையில் நடந்து வருகின்றது இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அந்த தேசம் அங்கீகரிப்பட வேண்டுமாகியிருந்தால் இலங்கைத் தீவிலே நடந்தேறிய இன அழிப்பு விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று விசாரிக்கப்பட்டு இந்த நாட்டிலே இன அழிப்பு நடந்துள்ளது, என ஊர்ஜீதப்படுத்தப்பட்டால் தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் அந்த நிலைப்பாட்டை கொண்ட ஒரே ஒரு தரப்பு இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பம் தலைமையிலான தரப்பு. எனவே மக்கள் இந்த விடயத்தை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களிலே இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டு இவ்வாறான தமிழர்களுடைய இருப்பை வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி அரசுக்கு காட்டிக் கொடுத்து நில அபகரிப்புக்கு அவர்களுடன் துணை நின்று செயற்பட்டவர்கள் இன்று தாங்கள்தான் சிறந்த தலைமைத்துவம் தாங்கள் கிழக்கை மீட்கப் போகின்றோம். வடகிழக்கை தக்கவைப்போம் என ; தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர் இதனை தமிழ் மக்கள் நன்று விளங்கி கொள்ளவேண்டும்.

னிமேல் காலம் எங்களுடைய தமிழர் தேசம் அங்கீகரிப்படாவிட்டால் எங்களுடைய தேசம் அழிவுற்று சிங்கள பௌத்த நாடு என்ற நிலைக்கு எட்டிச் செல்லும் என்றார்.