ரெயில்வே பாதுகாப்பு படையினர் 15 பேருக்கு கொரோனா- பெரம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை

23 0

சென்னை ரெயில்வே கோட்ட தலைமையகத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர் உள்பட ரெயில்வே பாதுகாப்பு படையினர் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் அடுத்தடுத்து கொரோனாவின் பிடியில் சிக்கினர். இதைத்தொடர்ந்து தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் போலீசார் சிக்கித் தவிக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக ரெயில்வே போலீசார் அதிகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது ரெயில்வே பாதுகாப்பு படையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையம் பார்சல் அலுவலகம் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் 15 ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒரு அறையில் தங்கியிருந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதில் ஒரு ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் சென்னை ரெயில்வே கோட்ட தலைமையகத்தின் 5-வது தளத்தில் செயல்படும், ரெயில்வே பாதுகாப்புப்படை அலுவலகத்தில் பணி செய்கிறார்.

இந்தநிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து, பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த மற்ற 14 ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 15 ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்புப்படை, ரெயில்வே போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது, போலீசாரிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.