நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே இந்த நெருக்குதல்கள்!

444 0

அச்சுறுத்தல்கள் அடக்குமுறைக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடந்து முடிந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே இந்த நெருக்குதல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியுள்ள ராஜபக்ஸக்கள் சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்கள் மீது கொண்டிருக்கின்ற அரசியல் ரீதியான அணுகுமுறையின் அப்பட்டமான வெளிப்பாடாக இந்த நெருக்குதல்கள் அமைந்திருக்கின்றன. அதனைத் தெளிவாகக் காண முடிகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது அந்த மண்ணில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களை நினைந்துருகி அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்ற ஒரு நிகழ்வு. வருடந்தோறும் நடைபெறுவது. நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெறுவது.

உயிரிழந்தவர்களை நினைந்துருகி பிரார்த்திப்பதே நினைவேந்தல். தமிழ் மக்களின் வாழ்வியலில் இது முக்கிய அம்சம். ஒரு பண்பாடு. கலாசாரமும்கூட. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இரத்தம் தோய்ந்த அந்த மண்ணின் கொடூரமான யுத்தத்தில் அனுபவித்த துன்பங்களுக்கான ஒரு திரள்நிலை வடிகால். நினைக்கும்தோறும் நெங்சங்களைப் பதறவைக்கின்ற அந்தத் தீராத மனத்துயரத்திற்கானதோர் ஆற்றுப்படுத்தல். அந்த நெடுந்துயரில் வாடுபவர்கள் மன ஆறுதலைத் தேடுவதற்கான ஒரு வாய்ப்பு.

அங்கு கொல்லப்பட்டவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் விடுதலைப்புலிகளாக இருக்கலாம் அல்லது அப்பாவிப் பொதுமக்களாக இருக்கலாம். அவர்கள் அனைவரும் மனிதர்கள். இந்தத் தேசத்தின் புதல்வர்கள். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் கண்டிருந்தால் விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி போராடியிருக்க மாட்டார்கள். யுத்தத்தினால் மோதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் தரப்பு என்ற முத்தரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயல்களும் இடம்பெற்றிருக்கமாட்டா

இறந்தவர்களை நினைவுகூர்வதும், அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையப் பிரார்த்திப்பதும் மனித இயல்பு. இதனை எவரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது. அவ்வாறு செய்வது மனிதாபிமானம் ஆகாது. மனிதத்துவமாகவும் இருக்க முடியாது.

ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறக் கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருந்து செயற்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் மூலம் இறந்துபோன விடுதலைப்புலிகளே நினைவுகூரப்படுகின்றார்கள் என்பதும் அதன் ஊடாக அவர்கள் மீண்டும் உயிர்பெற்றுவிடுவார்கள் என்பதுமே அரசாங்கத்தின் அக்கறை. அக்கறை என்பதைவிட அரசியல் ரீதியான அச்சம் என்றே கூற வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது அந்த மண்ணில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களை நினைந்துருகி அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்ற ஒரு நிகழ்வு. வருடந்தோறும் நடைபெறுவது. நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெறுவது.

உயிரிழந்தவர்களை நினைந்துருகி பிரார்த்திப்பதே நினைவேந்தல். தமிழ் மக்களின் வாழ்வியலில் இது முக்கிய அம்சம். ஒரு பண்பாடு. கலாசாரமும்கூட. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இரத்தம் தோய்ந்த அந்த மண்ணின் கொடூரமான யுத்தத்தில் அனுபவித்த துன்பங்களுக்கான ஒரு திரள்நிலை வடிகால். நினைக்கும்தோறும் நெங்சங்களைப் பதறவைக்கின்ற அந்தத் தீராத மனத்துயரத்திற்கானதோர் ஆற்றுப்படுத்தல். அந்த நெடுந்துயரில் வாடுபவர்கள் மன ஆறுதலைத் தேடுவதற்கான ஒரு வாய்ப்பு.

அங்கு கொல்லப்பட்டவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் விடுதலைப்புலிகளாக இருக்கலாம் அல்லது அப்பாவிப் பொதுமக்களாக இருக்கலாம். அவர்கள் அனைவரும் மனிதர்கள். இந்தத் தேசத்தின் புதல்வர்கள். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் கண்டிருந்தால் விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி போராடியிருக்க மாட்டார்கள். யுத்தத்தினால் மோதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் தரப்பு என்ற முத்தரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயல்களும் இடம்பெற்றிருக்கமாட்டா.

இறந்தவர்களை நினைவுகூர்வதும், அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையப் பிரார்த்திப்பதும் மனித இயல்பு. இதனை எவரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது. அவ்வாறு செய்வது மனிதாபிமானம் ஆகாது. மனிதத்துவமாகவும் இருக்க முடியாது.

ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறக் கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருந்து செயற்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் மூலம் இறந்துபோன விடுதலைப்புலிகளே நினைவுகூரப்படுகின்றார்கள் என்பதும் அதன் ஊடாக அவர்கள் மீண்டும் உயிர்பெற்றுவிடுவார்கள் என்பதுமே அரசாங்கத்தின் அக்கறை. அக்கறை என்பதைவிட அரசியல் ரீதியான அச்சம் என்றே கூற வேண்டும்.

அனுமதிக்க முடியாது’

‘விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள். முப்பது வருடங்களாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு, இந்த நாட்டை அச்சத்தின் பிடியில் வைத்திருந்தவர்கள். விடுதலைப்புலிகள் அமைப்பு அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டதோர் அமைப்பு. எனவே பயங்கரவாதிகளை எவரும் நினைவுகூர முடியாது. தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது’ என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.

இதற்கமைய நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுப்பதற்காக, முள்ளிவாய்க்காலின் 11 ஆவது நினைவு தினமாகிய 18 ஆம் திகதிக்கு முன்பே வட மாகாணத்தின் பல இடங்களிலும் இராணுவத்தினரையும், இராணுவ புலனாய்வாளர்களையும் அரசாங்கம் களத்தில் இறக்கியிருந்தது.

யுத்தத்தில் இறந்த பொதுமக்களை நினைவுகூர்வதற்குப் பொலிசாரின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்திருந்ததுடன், அனுமதி இல்லாமல் நடைபெறுகின்ற நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைளையும் அரசு முன்னெடுத்திருந்தது.

நினைவேந்தல் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களும் பொதுமக்களும் திரட்சியாகப் பங்கேற்றுவிடக் கூடாது என்பதற்காக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அச்சுறுத்தலை அரசு முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்திருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் செம்மணியில் நினைவுச்சுடரேற்றிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரையும் அவருடன் இணைந்திருந்த சிலரையும் கொரோனா நோய்த்தொற்று நியதிகளை மீறியிருந்தனர் என குற்றம் சுமத்தி நினைவேந்தலை பொலிசார் தடுத்திருந்தனர்.

நோய்த்தொற்றுத் தடுப்புக்கு உரிய வகையிலான இடைவெளியில் அவர்கள் செயற்பட்டிருந்த போதிலும், அதனை பொலிசார் ஏற்றுக்கொள்ளவில்லை. நோய்த்தொற்றுத் தடுப்பு முறைகளைக் கையாளவில்லை. நோய்த்தொற்றுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்று பொலிசார் அவர்களைத் தண்டித்திருந்தனர்.

ஆனால் கொரோனா நோய்த்தொற்று ஏற்படக் காரணமாக இருக்கின்றார்கள் அல்லது நோயைத் தொற்றச் செய்வார்கள் என்றால், முதலில் அவர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருக்க வேண்டும். அதற்கான மருத்துவச் சான்றிதழ் ரீதியான ஆதாரத்தைப் பொலிசார் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய அடிப்படை சட்ட ஆதாரமற்ற நிலையிலேயே பொலிசார் தமிழ் மக்கள் தேசிய முன்னணியினரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதை சட்டத்தரணிகள் யாழ் மாவட்ட நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து, நீதிமன்றம் தனது ‘தனிமைப்படுத்;தல் உத்தரவை’ மீளப் பெற்றுக்கொண்டது.

‘தடுத்தனர், திருப்பி அனுப்பினர்’

ஆனாலும் பொலிசார் அமைதியடையவில்லை. மே 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் நிகழ்வு உட்பட மூன்று நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவையும் பொலிசார் பெற்;று அவற்றை சட்ட ரீதியாகத் தடுத்திருந்தனர். கிழக்கு மாகாணத்திலும் இதே போன்ற நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று அங்கு இடம்பெற இருந்து நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடைம செய்வதில் பொலிசார் வெற்றி பெற்றிருந்தனர்.

தடையையும் மீறிச் செயற்பட்டிருக்க முடியும். ஆனால் தமிழரசுக் கட்சி பொதுச்சுகாதாரச் சட்டத்தைத் தமிழரசுக் கட்சி மீறிவிட்டது என்ற களங்கத்திற்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்காகவே நினைவேந்தல் நிகழ்வைப் பெருந்துயரத்தோடு நிறுத்துகிறோம் என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்திருந்தார். திருக்கோவில், வாகரை உள்ளிட்ட இடங்களிலும் நினைவு நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுளைத் தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவுடன் பொலிசார் நின்றுவிடவில்லை. இராணுவத்தின் துணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்குச் சென்ற முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை யாழ் – மன்னார் வீதி கேரதீவு வீதிச்சோதனைச் சாவடியில் வழிமறித்த பொலிசார் அங்கு செல்லவிடாமல் திருப்பி அனுப்பி வைத்தனர்.

விக்னேஸ்வரனையும் அவருடன் சென்றவர்களையும் தடுத்து நிறுத்திய பொலிசார் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான தனிமைப்படுத்திய சான்றிதழ் பெற்று வந்தீர்களா என பொலிசார் வினவிய வேடிக்கை சம்பவமும் அங்கு இடம்பெற்றிருக்கின்றது. எனினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தடுக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கான நீதிமன்ற உத்தரவை; காட்டியதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணத்திற்கே திரும்பியிருந்தனர். எனினும் வழியில் செம்மணியில் சுடரேற்றி நினைவுகூர முற்பட்டபோது, அங்கேயும் பொலிசார் அவர்களைத் தடுத்துவிட்டனர்.

இதேபோன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.சிறிதரன் போன்றவர்களையும் பொலிசாரும் இராணுவத்தினரும் முள்ளிவாய்க்காலுக்குச் செல்லவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பி வைத்திருந்தனர்.

கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக சட்டத்தின் பெயரால் முன்னெடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை அரசியல் ரீதியான பழிவாங்கல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் அரசாங்கம் தாராளமாகப் பயன்படுத்தி உள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுப்பதன் ஊடாக தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கும் இடையூறு விளைவித்திருக்கின்றது என்ற அரசியல் ரீதியான ஒரு பார்வையும் உண்டு.

‘மனமொன்றி அஞ்சலித்துப் பிரார்த்திக்க முடியவில்லை’

குறிப்பாக பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நோய்த்தடுப்பு சட்ட நியதிகளுக்கு உட்பட்ட வகையில் அரசியல் செய்வதற்கு எந்த வகையிலும் தடை விதிக்க முடியாது. அவ்வாறு செய்வது தேர்தல் கால அரசியல் உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற ஜனநாயக மறுப்புச் செயற்பாடாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இது அரசியல் ரீதியான நிலைப்பாடு.

ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுப்பதற்கான தடை உத்தரவை முழுமையாக அரசியல் நோக்கில் நோக்க முடியாது. அந்த நோக்கு நியாயமான நோக்காகவும் அமைய முடியாது. அரசாங்கத்தின் அடக்குமுறைச் செயற்பாடுகளை எடுத்துக் காட்டுவதற்கான விமர்சனத்தின் ஒரு பகுதியாகவே இதனை சிலர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

அரசியல் ரீதியாகவும்சரி, மனிதாபிமான நிலையிலும்சரி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசு தடுத்ததை நியாயமான நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. நோய்த் தொற்றுத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வேண்டுமானால் மக்கள் ஒன்று கூடுவது தடுக்கப்பட வேண்டும் என்று வாதிடலாம். ஆனால் இடைவெளியைப் பேணி நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை எந்த வகையிலும் தடுக்க முடியாது.

தடைகளுக்கு மத்தியில் கண்கொத்திப்பாம்பாகக் காத்திருந்த பொலிசார் மற்றும் புலனாய்வாளர்களின் பார்வையின் கீழ் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. உயிரிழந்தவர்களை நினைந்துருகி, முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்திற்குப் பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் செய்திருந்தனர். தடைகளுக்கு மத்தியிலும் பல்வேறு இடங்களிலும் சிறிய சிறிய அளவில் நினைவேந்தல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வுகள் அச்சுறத்தல்களுக்கு மத்தியில் மனம் அமைதியற்ற ஒரு நிலையிலேயே இடம்பெற்றிருந்ததாக அவற்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் கூறுகின்றனர். மனதில் ஓர் அச்சம் உறுத்திக் கொண்டிருந்தது. கூடி நின்று கண்காணித்துக் கொண்டிருந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் நிகழ்வு முடிந்த பின்னர் என்ன செய்வார்களோ, ஏது செய்வார்களோ என்ற அச்சம் மனதில் நிழலாடியது. இதனால் மனமொன்றி அஞ்சலி பிரார்த்தனைகளைச் செய்ய முடியவில்லை.

பொலிசாரின் கண்காணிப்பு மட்டுமல்லாமல் சிவிலுடையில் வந்து குவிந்திருந்தவர்கள் சுற்றிச் சுற்றி புகைப்படங்கள் எடுத்தமையும், நிகழ்வுகளை வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்தமையும் எங்கள் மனங்களை குறுகுறுக்கச் செய்தது. அத்தகைய மன நிலையில் எவ்வாறு நிம்மதியாக இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த முடியும்? என்று அவர்கள் கவலையோடு கேள்வி எழுப்பினார்கள்.

இந்த நிகழ்வுகள் அச்சுறத்தல்களுக்கு மத்தியில் மனம் அமைதியற்ற ஒரு நிலையிலேயே இடம்பெற்றிருந்ததாக அவற்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் கூறுகின்றனர். மனதில் ஓர் அச்சம் உறுத்திக் கொண்டிருந்தது. கூடி நின்று கண்காணித்துக் கொண்டிருந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் நிகழ்வு முடிந்த பின்னர் என்ன செய்வார்களோ, ஏது செய்வார்களோ என்ற அச்சம் மனதில் நிழலாடியது. இதனால் மனமொன்றி அஞ்சலி பிரார்த்தனைகளைச் செய்ய முடியவில்லை.

பொலிசாரின் கண்காணிப்பு மட்டுமல்லாமல் சிவிலுடையில் வந்து குவிந்திருந்தவர்கள் சுற்றிச் சுற்றி புகைப்படங்கள் எடுத்தமையும், நிகழ்வுகளை வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்தமையும் எங்கள் மனங்களை குறுகுறுக்கச் செய்தது. அத்தகைய மன நிலையில் எவ்வாறு நிம்மதியாக இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த முடியும்? என்று அவர்கள் கவலையோடு கேள்வி எழுப்பினார்கள்.

முள்ளிவாய்க்காலின் மனத்துயரங்கள்

கடந்து செல்லும் காலம் மனத்துயரங்களை ஆற்றும். ஆறச் செய்யும் என்று கூறுவார்கள். ஆனால் முள்ளிவாய்க்கால் துயரம் அத்தகையதல்ல. அங்கு துர் மரணங்களே நிகழ்ந்தன. ஊழிக்கால நிகழ்வாகவே அந்தத் துன்பங்கள் நடந்தேறின. உறவினர்களையும், உற்றவர்களையும் வகைதொகையின்றி இழந்த இழப்பு அது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று அப்பாவிகள் அநியாயமாகக் கொல்லப்பட்ட துன்பியல் நிகழ்வு அது. அந்த நினைவுகளில் இருந்து மீள்வதும், அந்தத் துயரங்களில் இருந்து ஆறுதல் பெறுவது என்பதும் சாதாரணமானதல்ல.

கொல்லப்பட்டவர்களுக்காக மனமுடைந்து அழுது அரற்ற முடியவில்லை. அன்புக்கு உரியவர்கள், அனுதாபிகளுடன் அங்கிருந்தவர்களினால் அந்தத் துயரத்தைப் பகிர்ந்து மனம் ஆற முடியவில்லை. இறந்த உடல்களுக்கு இறுதிக் கிரியைகளைக்கூடச் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் அந்தத் துயரங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் ஆற முடியாதல்லவா?

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளை வெற்றிகொண்டதை காலம் காலமாக அரசு கொண்டாடி வருகின்றது. யுத்தத்தில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு மடிந்த இராணுவ வீரர்களின் தியாகத்தைப் பேசுகின்ற அரசு அங்கு கொல்லப்பட்ட பொதுமக்களைப் பற்றி இன்னுமே வாய்திறக்கவில்லை. எதிரிகளான விடுதலைப்புலிகள் மட்டுமே அங்கு கொல்லப்பட்டார்கள் என்று வீரப்பிரதாபத்துடன் இராணுவ வெற்றிக்கு உரிமை கோருகின்றது.

உண்மையான யுத்த வெற்றியாளர்கள் எதிரிகளின் வீரத்தையும் இழப்பையும் குறிக்கத் தவறுவதில்லை. அதனைக் குறிப்பிடுவதன் மூலம்தான் வெற்றி பெற்றவர்களின் வெற்றியின் தன்மை தெரியவரும். அதேநேரம் யுத்த மோதல்களில் கொல்லப்படுகின்ற பொதுமக்களின் உயிரிழப்புக்களையும் கணக்கில் எடுத்துப் பேசினால்தான் வெற்றியாளர்களின் மனிதாபிமானமும் வெளிப்படும். அவ்வாறில்லையேல் அந்த வெற்றி இயந்திர மயமானதாகவே இருக்கும். மனிதர்களின் வெற்றியாகப் பரிணமிக்க முடியாது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அந்த வகையிலேயே ராஜபக்ஸக்கள் பிரசாரம் செய்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல. பேரினவாதப் போக்கில் ஊறியுள்ள அரசுகளும் அதைத்தான் செய்கின்றன.

நீதிக்கான நம்பிக்கை

முப்பது வருடங்களாக நீடித்த பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதிப்போர் முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த இறுதி யுத்தம் 2 வருடம் 10 மாதங்கள் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்து 900 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 29 ஆயிரம் இராணுவத்தினர் படுகாயமடைந்து அங்கவீனர்களாக வாழ்கின்றனர்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெறுவதற்குத் தியாகம் செய்த இராணுவத்தினரை நாட்டு மக்கள் அனைவரும் இந்த ‘இராணுவ வெற்றி தினத்தில்’ நாட்டு மக்கள் அனைவரும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தனது யுத்த வெற்றி தின அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த இறுதி யுத்தத்தில் மாத்திரம் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற ஐநா கூறியிருப்பதை அவர் கவனத்தில் கொள்ளவே இல்லை. எதிரிகளானாலும் சண்டைகளில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் மரணங்களும் அவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

புலிகள் அமைப்பின் தோல்வி காரணமாக தமிழ் மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் தேர்தல்களை நடத்துவதற்கும் வாய்ப்பு கிட்டியிருப்பதனால், அந்த மக்களின் இறையாண்மை அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் இராணுவ வெற்றிக்கான அந்த இறுதி யுத்தத்திற்கு ஜனாதிபதி என்ற ரீதியில் தலைமை தாங்கியிருந்த இப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது யுத்த வெற்றிதின செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் தேர்தல்கள் நடைபெற்றதையும், அவற்றில் மக்கள் வாக்களித்ததன் மூலம் முப்பது வருட காலமும் இலங்கையில் பாராளுமன்ற ஆட்சி தடையின்றி முன்னெடுக்கப்பட்டதையும் இலங்கை மக்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளும் உலக மக்களும் நன்கறிவார்கள்.

யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரான பதினொரு வருடங்களிலும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் முள்ளின் மீதிருப்பது போன்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற கொடூரங்களுக்கு அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைக்காவிட்டாலும்கூட, மனிதாபிமான ரீதியில் அந்த இழப்புகளும் ஆட்சியாளர்களினால் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

பதினொரு வருடங்கள் கழிந்த பின்னரும் முள்ளிவாய்க்கால் யுத்ததில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்களே என்று யுத்த வெற்றி பற்றி பேசுகின்றவர்களின் மனச்சாட்சிகள் அவர்களை உறுத்தவே இல்லை.

இத்தகைய பின்புலத்தில்தான் அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் முள்ளிவாய்க்காலின் 11 ஆவது நினைவேந்தல் நடந்தேறியிருக்கின்றது. அங்கு நிகழ்ந்த துயரங்களுக்கும், நிகழ்த்தப்பட்ட உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பு கூறப்படும். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் இன்னும் கொண்டிருக்கின்றார்கள்.

பி.மாணிக்கவாசகம்