இனஅழிப்பின் உச்சம்…-அகரப்பாவலன்-

90 0

இனஅழிப்பின் உச்சம்.
*********
-அகரப்பாவலன்-

“முள்ளிவாய்க்கால்”
உலகப் போரியல் வரலாற்றில்
தமிழினப் படுகொலையின்
அடையாளம்…
ஒவ்வொரு ஈழத்தமிழரின்
ஆழ்மனதில் ஆழமாய்
பதிந்த துயரப் பதிவு…

சுயநலத்தின் உச்சம்
தலைக்கேறிய
உலக வல்லரசுகளும்
சிங்கள இனவெறி அரசும்
சேர்ந்து நடத்திய
இனவெறி ஆட்டத்தின் உச்சம்…

கந்தகத் தீப்பொறியை
சுற்றிவளைத்து நகர்த்தி
முன்னேறிய மூத்தகுடியின்
வேரையும், உணர்வையும்
கருக்கி மகிழ்ந்த
மனிதம் கொன்றவர்களின்
இழிசெயல் நடந்தேறிய
கொடிய நாள்…

உலகப் போரியல் சட்டத்தை
சாக்கடையில் தள்ளிவிட்டு
நச்சுக் குண்டுகளை
கொத்துக் கொத்தாய் போட்டு அழித்தனரே!

நியாயங்கள் புதைகுழிக்குள்
மூழ்கடிக்கப்பட்டு
அநியாயங்கள்
தலைவிரித்தாடியது…

கருகிய நிலையில்
கண்டோம்
எங்கள் தேசத்தின்
உறவுகளை…
இப்படி எத்தனை! எத்தனை!
மனிதம் புதைத்த
இனவெறி ஆட்டம்
நடந்தேறியது…

கந்தகத் தீப்பொறிவைத்து
புலிவேட்டை ஆடுவதாக
பரப்புரை செய்து கொண்டு
தமிழினத்தின்
ஆணிவேரை கருக்கத்
துணிந்த வல்லரசுகளும்
சிங்கள இனவெறி அரசும்
புரியாத விடயம்
ஒன்று உண்டு…

முள்ளிவாய்க்காலில்
உழப்பட்டதும்
ஊற்றப்பட்டதும்
விதைக்கப்பட்டதும்
ஈழத்தமிழரின்
குருதியும்….
பிணங்களும்….
உயிர்களும்….என்பது
மிக ஆழமாக பதிவான
சக்தியின் வீச்சு….

உலக வரலாற்றில்
உலகம் பிடிக்கச் சென்ற
பல அரசுகளின்
தோல்வியில் முடிந்த கதை
பாடப் புத்தகங்களில்
பாடமாக்கப்பட்டுள்ளது….

இயற்கை வலிமையானது
நாம்!
இயற்கை வழிநடப்பவர்
வழி திறக்கும்
அழிவில் இருந்து நிமிர்வோம்…
இது ஈழப்போரின்
நெருப்புக் கற்கள் நிறைந்த
படிக்கற்கள்…

தமிழீழ இலக்கொன்றே
முடிந்த முடிவு…
தொடரட்டும் – நம்
முனைப்பின் சக்தி
அடையும் அது
ஈழத்தின் சித்தி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.