ஒரு தமிழன் வாழும் வரை இனவழிப்பு செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவேந்திக் கொண்டே இருப்பான்!

953 0

இனவழிப்பு செய்யப்பட்ட எங்களுடைய உறவுகளை நினைவு கூறுவதற்கு இனவழிப்பு உச்சம் பெற்ற மே மாதத்தின் இவ் வாரம் இனஅழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவுகூறுவதற்குரிய வாரமாக பிரகடனப்படுத்தி நினைவேந்தல்களை மேற்கொண்டு வருவது தமிழனத்தின் கடந்த கால வரலாறு.

இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட நாம் இனவழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல்களை தற்போதைய இடர்கால நிலமையறிந்து சமூக இடைவெளிகளைப் பேணி நினைவேந்தல்களை மேற்கொண்டு வருகையிலும் அதனை பொலிசாரும் நேரில் கண்டு கொண்ட நிலையிலும் பொலிசார் எடுத்துள்ள இவ் நடவடிக்கை சமூக அக்கறைக்குரியது அல்ல. மாறாக இவ் நினைவேந்தல்களை முற்றாக தடை செய்ய வேண்டும் என்பதே அவர்களுக்கிருந்த அதித அக்கறை. அதற்கேற்றாற் போல் கௌரவ நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களினை கொடுத்து ஒரு கட்டளையைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஏன் எனில் இவ் நினைவேந்தல் நிகழ்வுகளில் எந்த விதத்திலும் பங்குபற்றாத ஒரு சிலரது பெயர்களை இதில் உள்ளடக்கியிருப்பது பொலிசாரின் நிகழ்ச்சிநிரல் எது என்பதனை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

அத்துடன் தற்போது பாதுகாப்பு அமைச்சு முள்ளிவாய்கால் நினைவேந்தல் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தினமல்ல. அவ்வாறு  இருக்கையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதன் பின்னணியில் தான் பொலிசாரின் இச் செயற்பாடும் அமைந்துள்ளது. மேலும் மே 19 ஆம் திகதி இராணுவ வெற்றி தினம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர நினைவுத் தூபில் மாலை 4 மணிக்கு அமைதியாக நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

இனவழிப்பு செய்யப்பட்ட மக்களினை நினைவுகூர்ந்தால் சமூகத் இடை வெளி, கொரோனா தொற்று அதன் காரணமாக தனிமைப்படுத்தல். ஆனால் ஒரு இராணுவ வெற்றித்தினத்தை மட்டும் கொண்டாடுவதற்கு அது எவ்வாறு இடமிளிக்கும்?

யாழ்.நகரில் பல்வேறு இடங்களில் ஒன்று கூடுகின்ற மக்களை தகுந்த சுகாதார நடவடிக்கைகளுடன் முன்னெடுக்க அனுமதிக்கின்ற பொலிசார் தகுந்த அறிவிக்கப்பட்ட சுகாதார நடைமுறையுடன் முன்னெடுக்கப்பட்ட இவ் நினைவேந்தல் நிகழ்வுகளில் மட்டும் இவ்வாறாக நடந்து கொள்வதில் இருந்து ஒன்று மட்டும் புலனாகின்றது

கொரானா தொற்றோ சமூக இடைவெளியோ பொலிசாரின் பிரச்சனை அல்ல. இனவழிப்பு செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான எம் மக்களுடைய நினைந்தல்களை தடைசெய்ய வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம் குறிக்கோள். அதற்கு இம்முறை பொலிசார் கையில் எடுத்துள்ள ஆயுதம் கொரோனா தொற்று சமூக இடைவெளி

சுதந்திரத்தை நசுக்குபவர்கள் அதனை சட்டம் ஒழுங்கு என்ற பெயரிலேயே செய்கின்றார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு அவ்வளவுதான். தனித்து நின்று போராடி அகிலம் போற்ற வாழ்ந்த தமிழினத்தில் யாரை யார் தனிமைப்படுத்தினாலும் அடக்கினாலும் தனி ஒரு தமிழன் வாழும் வரை இனவழிப்பு செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவேந்திக் கொண்டே இருப்பான் என்ற வரலாற்று உண்மை இவர்களுக்கு என்னும் புரியாமல் இருப்பதே வருத்தமளிக்கின்றது

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி