பருவநிலை மாற்றத்தை தடுக்க 10,000 கோடி டாலர்: 196 நாடுகள் கூட்டுப் பிரகடனம்

264 0

201611180930550521_un-meet-calls-for-combating-climate-change-on-urgent_secvpfபருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இதற்கு தேவையான 10,000 கோடி அமெரிக்க டாலர்களை திரட்டித் தரவும் ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 196 நாடுகள் இன்று கூட்டுப் பிரகடனம் செய்துள்ளன.

புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை தடுக்க பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில் 195 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை சமாளிக்க, வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் 10,000 கோடி அமெரிக்க டாலர்களை (ரூ.6.70 லட்சம் கோடி) நிதியுதவி அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

மேலும், கார்பன் புகை வெளியேற்றத்தால் புவி வெப்பமடைவதை மேலும் இரண்டு டிகிரி செல்சியஸ் அளவை தாண்டாத வகையில் உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது குறித்த தீர்மானம் நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதில் ஒருமித்த கருத்து எட்டுவதில் மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், எல்லா நாடுகளுக்கும் உகந்த வகையில் ஒருமித்த கருத்துகள் அடங்கிய வரலாற்று சிறப்பு மிக்க இறுதி வரைவு அறிக்கையை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரெண்ட் பேபியஸ் இம்மாநாட்டில் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் முன்னிலையில், வரைவு அறிக்கைக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் தொடர்பு கொண்டு வரைவு அறிக்கைக்கு ஆதரவு கோரினார்.

வரைவு அறிக்கையில் ஏற்கனவே ஆலோசனை நடத்தியபடி, புவி வெப்பத்தை இரண்டு டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாக 1.5 டிகிரியில் கட்டுக்குள் வைப்பது, வளரும் நாடுகளுக்கு வரும் 2020-ம் ஆண்டு தொடங்கி ரூ.6.70 லட்சம் கோடி நிதியுதவு அளிப்பது என்ற தீர்மானங்கள் இடம் பெற்றுள்ளன. பருவநிலை மாற்றங்களின் விளைவுகளை சமாளிக்கும் அம்சங்கள் அடங்கிய கொள்கைகள் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த இறுதிவரைவை பிரகடனமாக அறிவிக்க 196 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற பருவநிலை மாற்றத்தை தடுக்கும் 22-வது மாநாடு மொராக்கோ நாட்டில் உள்ள மராக்கேஷ் நகரில் இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டின்போது, புவி வெப்பமயமாதலை எதிர்கொள்ள ஆற்ற வேண்டிய அவசர கடமை என்ற தலைப்பில் 196 நாடுகளின் சம்மதத்துடன் ‘மராக்கேஷ் நடவடிக்கை பிரகடனம்’ வாசிக்கப்பட்டது.

அந்த பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

நமது பூமியின் பருவநிலையானது முன்னர் எப்போதுமில்லாத அளவில் எச்சரிக்கும் வகையில் வெப்பமயமாகி வருவதை தடுக்கும் பணிக்கு முன்னுரிமை அளித்து நாம் அவசரமாக கடமையாற்ற வேண்டியுள்ளது.

இதற்காக, பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் மராக்கேஷ் நகரில் இன்று நடைபெறும் 22-வது மாநாட்டில் கூடியுள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளாகிய நாங்கள் இந்த கூட்டுப் பிரகடனத்தின் மூலம் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கையிலும், இதுதொடர்பான நிலையான முன்னேற்றம் காணவும் உழைப்போம் என உறுதியேற்கிறோம்.

நமது காலத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டியதன் அவசியத்தை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

இந்த சவாலை எதிர்கொள்ள தேவையான பத்தாயிரம் கோடி டாலர் நிதியை திரட்டித்தர எங்களது பங்களிப்பை ஆற்றுவோம் என்றும் வளர்ந்த நாடுகளின் தலைவர்களான நாங்கள் மீண்டும் உறுதியேற்கிறோம்.

மேற்கண்ட வாக்குறுதிகள் மட்டுமின்றி, ஏற்கனவே பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றத் தடுப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களும் இன்றைய பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளன.