வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டம் அதிகரிப்பு- எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதுமுள்ள பஸ் சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

327 0

bus-06
வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படுகின்ற தண்டப் பணத்தின் அளவு அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பில் தற்போது நாடு பூராகவும் உள்ள பல பஸ்கள் இணைந்து கொண்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வொன்று எட்டப்படாத பட்சத்தில், பாடசாலை வான்கள், முச்சக்கரவண்டி சாரதிகளை இணைத்துக் கொண்டு பாரிய பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் ஏற்பாட்டாளர் குமார ரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.

இந்த பணிப் பகிஷ்கரிப்பினால் பாரியளவிலான பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளிடமிருந்து அறவிடப்படுகின்ற தண்டப் பணத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப் பகிஷ்கரிப்பொன்றை நடாத்த முன்னரும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், நிதி அமைச்சருடன் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டிருந்தது.

இதேவேளை, இன்றைய தினம் முன்னெடுக்கப்படுகின்ற பணிப் பகிஷ்கரிப்பு குறித்து எதிர்வரும் தினங்களில் பதிலளிக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.