சிவனொளிபாதமலை பருவகாலம் இன்றுடன் நிறைவு

275 0

சிவனொளி பாதமலை பருவகாலம் இன்று (வெசாக்) தினத்துடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிறைவு தினத்தினை முன்னிட்டு சிவனொளிபாத உச்சியில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் பிரித் ஓதலினை தொடர்ந்து இராணுவத்தினரால் விக்கிரகங்கள் மற்றும் திருவுருவச்சிலை ஆபரணங்கள் அடங்கிய பேளை ஆகிய நல்லத்தண்ணீர் வழியாக கொண்டு வரப்பட்டு மீண்டும் பொகவந்தலாவை  பெல்மதுளை வீதியூடாக  கல்பொத்தாவல விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

சிவனொளிபாதமலை பருவக்காலம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 11 ம் திகதி பெல்மதுளை கல்பொத்தாவல விகாரையிலிருந்து விக்கிரகங்கள்,தூபி மற்றும் தேவ ஆபரணங்கள் ஆகியன மிகவும் விமர்சையாக பெல்மதுளை அவிசாவளை வீதி மற்றும் பெல்மதுளை பொகவந்தலாவை வீதி , இரத்தினபுரி ஸ்ரீ பலாபத்தல வீதி ஆகிய வீதிகள் ஊடாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பருவகாலம் சுமார் 6 மாதங்கள் வரை நடைபெறும்.

இவ்வாறு நடைபெரும் காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபடுவர்.

ஆனால் இவ்வருடம் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதனாலும் மாவட்டங்களுக்கிடையிலான பயணங்கள் தடைசெய்யப்பட்டதனாலும் பக்தர்கள் வருகை தரமுடியாத நிலை ஏற்பட்டன.

இதன் காரணமாக இந்த பிரதேசத்தில் பருவகால வர்த்தகத்தினை நம்பியிருந்த பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

அதிகமான வர்த்தகர்களின் பொருட்கள் விற்பனை செய்யமுடியாது நட்டமடைந்தமை குறிப்பிடத்தக்கது.