ஜனநாயகத்தை குறுகிய அரசியல் தேவைக்குப் பயன்படுத்த வேண்டாம்-ஜனாதிபதி

296 0

imagesஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காகவோ இனவாத அல்லது மதவாத அடிப்படையிலோ பயன்படுத்துவது நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தடையாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் 47வது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

இன்றைய அரசாங்கம் அரச கொள்கைகளுக்கமைய சகல துறைகளிலுமான பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றி வருகிறது.

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ள அரசு, படிப்படியாக முன்னோக்கி பயணிக்கிறது.

ஒருசிலர் எதிர்பார்ப்பதுபோல் உடனடியாக தீர்வு காணமுடியாத போதிலும் முறையான திட்டங்கள் மூலம் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் பாடுபடுகிறது.

சுதந்திர சுகாதார சேவையை மேலும் பலப்படுத்துவடன் அத்துறையிலுள்ள அனைவரினதும் தொழில் சிறப்புரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்துக்காக சிறப்பாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பத்துப்பேருக்கு ஜனாதிபதி பரிசில்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி ஆகியோர் உட்பட மருத்துவர்கள், சுகாதார துறை நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.